பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் 137 பொதுவாகவும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு பாடத்தைச் சுந்தரர் வாழ்க்கையின், இடைப் பகுதியில் அறிவிக்கிறது. தவறுக்குத் தண்டனை எவருக்கும் உண்டு 'உன்னை விட்டுப் பிரியேன்” என்று சத்தியம் செய்து கொடுத்துத் திருவொற்றியூரில் சங்கிலியை மணந்தார். அவருடன் சிலகாலம் தங்கியதும், இளவேனிற்காலம் வந்தது; தென்றல் வீசிற்று; திருவாரூரில் உள்ள புற்றிடம் கொண்ட புராதனனை நினைத்தார். 'எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என் ஆரூர் இறைவனையே’ என்ற நினைவு வந்தது. சங்கிலி யாரிடம்கூடச் சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை. ஆரூரன் அழைப்பு அவ்வளவு வலுவாக இருந்தமையின், உடனே திருவாரூருக்குப் புறப்பட்டு விட்டார். திருவொற்றியூர், எல்லையைத் தாண்டியது தான் தாமதம், கண்கள் இரண்டும் பார்வை இழந்தன. ஆராத் துயரத்தில் மூழ்கினார் ஆரூரர். எதனால் தம் கண் போயிற்று என்பதை நன்றாக அறிந்தார். சுந்தரர். திரும்பிவிட ஒரு வினாடிகூட அவர் நினைக்கவில்லை. உடன் வருபவர்கள் துணையுடன், ஆரூரரிடம் புறப்பட்டுவிட்டார் நம்பி ஆரூரர் வழியில் உள்ள திரு வெண்பாக்கம், வடதிருமுல்லைவாயில் முதலிய ஊர்களில் உள்ள பெருமானை வணங்கித் தம், குறை தீர்க்குமாறு