பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சேக்கிழார் தந்த செல்வம் நிழலாடிற்று. அது "என் கடன் பணி செய்து கிடப்பதே' (திருமுறை: 5,199) என்பதாகும். இறையருளைப் பூரணமாகப் பெற்றவரும் தமிழகம் முழுதும் சுற்றித் திரிந்தவரும் முதிர்ந்த வயதும் அனுபவமும் பெற்றுப் பழுத்த பழமாக இருந்த வருமாகிய நாவரசப் பெருமானின் இந்த இரண்டு சொற்றொடர்களும் சேக்கிழார் பெருமானின் மனத்தை உலுக்கியிருக்க வேண்டும். 6ஆம் நூற்றாண்டில் நாவரசப் பெருமான் கண்ட அதே குறைகளை 12ஆம் நூற்றாண்டில் தம் காலத்தில் இன்னும் பெரிதாக வளர்ந்து பூதாகாரமாகக் காட்சி அளிப்பதைத் தலைமை அமைச்சர் காண்கிறார். அன்றைய தமிழ்ச் சமுதாய நிலை எவ்வளவு செல்வச் செருக்குடன் ஒரு சமுதாயம் இருந்தாலும் குறிக்கோளும் தொண்டு மனப் பான்மையும் இல்லையானால் அச்சமுதாயம் நீண்ட நாள் வாழமுடியாது. இவை இரண்டும் சேக்கிழார் காலத்தில் தமிழ்ச் சமுதாயத்தை விட்டு மறைந்து விட்டன. எனவே, அச் சமுதாயத்தைத் தட்டி எழுப்பி இவை இரண்டின் இன்றியமையாமையை அறிவிக்க விரும்புகிறார் சேக்கிழார். அதனை எவ்வாறு செய்வது என்ற வினா அவருடைய மனத்தில் தோன்றியிருக்க வேண்டும்.