பக்கம்:சேக்கிழார் தந்த செல்வம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப்பிள்ளையாரும் காளத்திவேடனும் 301 பொழுது, குறையத் தொடங்கிய பாரம், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, குடுமித் தேவரைப் பார்க்கின்ற அந்த வினாடியில் முழுவதுமாக நீங்கி விடுகிறது. இந்த வினாடியில் நாகன் மகன் திண்ணன் மறைந்து விடுகிறான். திண்ணனின் வடிவம் முழுவதும் பஞ்ச பூதங்களும், பொறி புலன்களும் சேர்ந்து ஆக்கிய உடம்பாக இல்லாமல், அவ் வடிவு முழுவதையும் இறையன்பு என்ற ஒன்று ஆட்கொண்டுவிட்டது. இந்த முழுமாற்றம் (metamorphosis) ஏற்பட்ட பிறகு, அவன் வடிவு, செயல் அனைத்தும் இறைவன் செயலாகவே மாறிவிடுகின்றன. அதனால், எதிரே உள்ள சிவலிங்கத் திருமேனி, திண்ணன் கண்களில் கல்லால் செய்யப்பட்ட விக்கிரகமாகத் தோன்றவில்லை. அவனைப் பொறுத்த மட்டில், பரம்பொருள் நிர்க்குண, நிராமய, நிராலஞ்சனமாக இருக்கின்ற ஒன்று என்ற சிந்தனை இல்லை. அந்தத் திருமேனியைக் கட்டிக்கொண்டு, "மலையிடை எனக்கு வாய்த்த மரகதமணியே’ என்று பேசத் தொடங்கியவன், தனக்கு மிகவும் வேண்டப்பட்ட, தன்னால் காக்கப்பட வேண்டிய ஒரு தோழனாகவே குடுமித்தேவரைக் கருதுகிறான். இதன் பிறகு, குடுமித்தேவரின் முழு அன்பனாகிய ஒருவன்தான் அங்கு உள்ளானே தவிர, நாகன் மகன்