பக்கம்:சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் இராசமாணிக்கனார்

89

தஞ்சாவூர்:செருத்துணை நாயனார் என்பவர் பிறந்த பதி தஞ்சாவூர் என்பது. அது மருகல் நாட்டைச் சேர்ந்தது என்று நம்பியாண்டார் நம்பி குறித்தார். 'மருகல் நாடு எந்தப் பெருநாட்டைச் சேர்ந்தது என்ற ஐயம் நூலைப் படிப்பவர்க்கு உண்டாகுமன்றோ? சேக்கிழார் அக்குறையைப் போக்க, “பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்” என்று கூறுமுகத்தான், மருகல் நாடு சோழ நாட்டைச் சேர்ந்தது என்பதைத் தெளியவைத்தார். இம் மருகல் நாட்டின் 'தலைநகரான மருகல், பாடல் பெற்ற 'திருமருகல் என்னும் பழம் பதியாகும். அது நன்னிலம் தாலு காவில் உள்ள ஊராகும். அதற்கு ஐந்து கல் தொலைவில் தஞ்சாவூர் இருக்கின்றது. இஃது இராசராசன் காலத்துத் தலைநகரான தஞ்சாவூரினும் வேறுபட்டதாகும்.

திருப்பெருமங்கலம்: இது கலிக்காம நாயனார் பிறந்த ஊராகும். இதனைச் சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையிற் குறிக்கவில்லை. நம்பியாண்டார் நம்பியும் தமது திருத்தொண்டர் திருவந்தாதியிற் குறிக்கவில்லை. ஆயின், சேக்கிழார் ஒருவரே இவ்வூரின் பெயரையும் இதன் வளத்தையும் விளக்கமாகத் தமது நூலிற் கூறியுள்ளார்.

“சோழ நாட்டில் பொன் கொழிக்கும் காவிரியின் வடகரைக்குக் கிழக்குப் பக்கம் உள்ளது திருப்பெருமங்கலம். அஃது ஆடும் கொடிகளைக் கொண்ட உயர்ந்த மாடங்களையுடைய பெரிய நகரம். அதுவே சோழர் சேனைத் தலைவராய கலிக்காம நாயனார் வாழ்ந்த திருப்பதி.” என்பது சேக்கிழார் வாக்கு. இப்பழம்பதி காவிரி, வடகரைக்குக் கிழக்கே திருப் புன்கூருக்குப் பக்கத்தில் சிற்றுாராக இருக்கின்றது.