பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். எம். கமால்

59

பதவிக்கும் போட்டி, இதனால் போட்டி நிஜாம்களில் ஒருவர் சந்தாசாகிபையும் மற்றவர் அன்வர்தீனையும் ஆற்காடு நவாபாக நியமித்தனா. இந்த இருவர்களுக்கு இடையே நிகழ்ந்த பூசல்களில் பிரெஞ்சுக்காரரது துணை கொண்ட சந்தாசாகிபை சேதுபதி மன்னர் ஆதரித்தார். திருச்சி அருகே நடைபெற்ற போரில் உதவுவதற்காக 5000 மறவர்களையும் சேதுபதி மன்னர் அனுப்பி வைத்தார்.

அந்தத் திருச்சிப் போரில் பிரெஞ்சு காரரை நம்பிய சந்தாசாகிப் தோல்வியுற்றார். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதரவு பெற்ற அன்வர்தீனின் மகன் முகம்மதலி ஆற்காடு நவாபானார். இந்த மாறுபட்ட சூழ்நிலையில் சேதுமன்னர் ஆற்காடு நவாப்பிற்காகத் திருநெல்வேலிப் பாளையக்காரர்கள் மீது படையெடுத்துச் சென்ற ஆங்கில தளபதி ஹெரானுக்கு நல்லெண்ண நடவடிக்கையாக உதவிகளை வழங்க முன்வந்தார். மன்னார் வளைகுடாவில் உள்ள இரண்டு தீவுகளை ஆங்கிலேயரின் பயன்பாட்டிற்குக் கொடுக்க முன்வந்தார். தளபதி ஹெரான் சேதுபதியின் நல்லெண்ண முயற்சிகளைப் பாராட்டி ஏற்றுக் கொண்டாலும். மேலிடம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முன்னோர்களைப்போல இந்த மன்னரும் திருக்கோயில்களுக்கும், அன்னசத்திரங்களுக்கும் ஆதரவு வழங்கி வந்ததுடன் கி.பி.1762ல் காலமானார். இவருக்கு ஆண்வாரிசு இல்லாததால் இவரது தங்கை முத்துத் திருவாயி நாச்சியார் மகன் முத்துராமலிங்க சேதுபதி என்ற 11 மாதப் பாலகன் சேதுபதியாகப் பட்டம் சூட்டப்பெற்றார்.