உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வஞ்சிமாநகரம்.

119

ஆடைநெய்துவிற்போர், பொன்வாணிகர், இரத்தின வியாபாரிகள் வீதிகளும், அந்தணர் அக்கிரகாரமும், இராசவீதியும், மந்திரிகள் வீதியும், பல்வகை அரசாங்க அதிகாரிகள் வாழும் தெருக்களும் அப்பெருநகரில் முறையே அமைந்திருந்தன. இவையன்றி, யாவரும் வந்து தங்குதற்குரிய மரத்தடிகளும், அம்பலமும், முச்சந்தி நாற்சந்திகளும், அருவியோடும் அழகிய செய்குன்றுகளும், இளமரக்காக்களும், பொய்கைகளும், அறச்சாலைகளும், பொன்னம்பலமும், தவப்பள்ளிகளும் விளங்கின. மிகவழகாக அமைக்கப்பட்ட பௌத்த சைத்திய மொன்றும்[1] அவ்வஞ்சியினுள்ளே திகழ்ந்தது. (மணிமே. காதை. 28)

சேரருடைய அரண்மனையானது அம்மூதூரின் மத்தியில், பொன்மயமானதொரு சிறு மேருப்போலப் பிரகாசித்தது; “நெடுநிலை மேருவிற், கொடிமதின் மூதூர் நடுநின்றோங்கிய, தமனிய மாளிகை” என்பர் இளங்கோவடிகள்.[2] அதனுள் அத்தாணிமண்டபமும் (கொலுவிருக்கை), வேத்தியன்மண்டபமும் (மந்திராலோசனைச்சபை), மணியரங்குகளும் (நடனசாலை), பிறவும் மாட்சிமை பெற்று விளங்கின. அரசன் தன் மனைவியுடன் வசந்தகாலத்தைக் கொண்டாடுதற்கென்று அமைந்த 'இலவந்திகை வெள்ளிமாடம்' என்னும் மாளிகை யொன்றுண்டு.[3] இஃதன்றி, நகர்ப்புறத்தே, பொய்கைகளாலும் சோலைகளாலும் சூழப்பட்ட 'வேளாவிக் கோ-


  1. கோவலனுக்கு ஒன்பதாந்தலைமுறைப் பாட்டனான கோவலனால் வஞ்சிநகரிற் கட்டப்பட்டதாக மணிமேகலையிற் கூறப்படும் பௌத்த சைத்தியம் இதுபோலும். (காதை -28. 123-31)
  2. சிலப். 28. 46—50.
  3. ௸ 25.4.