பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சரிதநிகழ்ச்சிகள்.

37

என்றான். கண்ணகி, ‘மாதவிக்கு மேலுங்கொடுக்கப் பொருளின்மையால் இங்ஙனம் கவல்கின்றான்’ என்று கருதி ‘அடியேனிடத்து இரண்டு சிலம்புகள் உள்ளன. அவற்றைக் கொண்டருள்க’ என்றாள். இதுகேட்ட கோவலன், ‘ஆயின் மதுரையடைந்து அச்சிலம்பையே முதலாகக்கொண்டு வாணிகஞ்செய்து பொருள் தேட எண்ணுகின்றேன்; நீயும் உடன் வருக’ என்றான். இதற்குக் கண்ணகியும் சம்மதிக்க, அவ்விரவின் கடையாமத்தே ஒருவருமறியாவகை அவ்விருவரும் புறப்பட்டுக் காவிரியின் வடகரை வழியே சென்று, ஆங்கொரு சோலையில் மதுரைக்குப் புறப்படச் சித்தமாயிருந்த கௌந்தியடிகள் என்ற ஜைநசந்யாஸிநியுடன் கூடிப் பிரயாணஞ்செய்து கொண்டு உறையூர் வந்து சேர்ந்தார்கள்.

இங்ஙனம் வந்தவர்கள், மறுநாள் அவ்வூரினின்று புறப்பட்டு இடைவழியிலெதிர்ப்பட்ட அந்தணனொருவனால் மதுரைக்கு மார்க்கந் தெரிந்து கொண்டு அப்பாற் சென்றனர். செல்கையில், காலைக்கடன் கழிப்பதற்காகக் கோவலன் ஒரு பொய்கைக்கரையை அடைந்து நிற்க, ஆங்குத் தன் நாடகக் கணிகையால் விடுக்கப்பட்டுத் தன்னைத் தேடிவந்த கௌசிகன் என்ற பார்ப்பனனைக்கண்டு, தன் தந்தைதாயரின் துயரங்களையும் மாதவியின் பிரிவாற்றாமையையும் அவன் சொல்லக்கேட்டு வருந்தி, தான் புறப்பட்ட காரணத்தைத் தன் பெற்றோர்க்குக்கூறித் தன் வந்தனங்களையும் தெரிவிக்கும்படி சொல்லி, அவனையனுப்பிவிட்டு, முன்போலவே கௌந்தியடிகளுடன் பிரயாணமாகி மதுரையை நெருங்கி, வையையாற்றைத் தொழுது படகேறி, அந்நகரின் மதிற்புறத்துள்ள ஜைநமுனிவரிருக்கையில் அவ்வடிகளுடன் தங்கினான்.