உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சேரன் செங்குட்டுவன்.djvu/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டு சரிதநிகழ்ச்சிகள்.

47

செல்லவேண்டிய அவசியகத்தையும் மணிமேகலைக்கு வற்புறுத்தினன். இவற்றைத் தன் பாட்டன்வாய்க் கேட்டதும் அவள் வஞ்சியினின்றும் உடனே புறப்பட்டுக் காஞ்சிமாநகர மடைந்து, அந்நகரிற் பசியால் வருந்திவாடிய உயிர்கட்கெல்லாமுணவளித்துத் தன் தாயுடன் அறவணவடிகளையும் ஆங்குக் கண்டு வணங்கி, அவ்வடிகளால் பௌத்தமத தருமங்களனைத்தும் உபதேசிக்கப்பெற்றுப் பின் முத்தி பெறுதற்பொருட்டு அக்காஞ்சியிலேயே தவஞ்செய்துகொண்டிருந்தனள்.

மேற்காட்டிய இரண்டு சரித்திரங்களும் செங்குட்டுவன் சம்பந்தம் பெற்று அவன் வரலாறுகள் பலவற்றை அறிவிக்கக் கூடியனவாயிருக்கின்றன. இவ்விரண்டு சரித்திர நூல்களுள், சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியான வஞ்சிக் காண்ட முழுதும், செங்குட்டுவன், கண்ணகியின் படிவஞ் சமைக்க வேண்டி இமயமலையிற் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டுவதற்கும், அம்முயற்சியில் தன்னையிகழ்ந்த ஆரியவரசரை வெற்றிகொள்ளுதற்குமாக நிகழ்த்திய வடநாட்டு யாத்திரையையும், அதன்பின் நிகழ்ந்த அச்சேரன் செய்திகளையும் மிகுதியாகக் கூறுவது. ஆதலின், அக்காண்டத்தே இளங்கோவடிகள் கூறியிருப்பவை பெரும்பாலும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் உபகாரமாயிருத்தலால், அவ்வடிகளது செய்யுணடையை ஏற்றபெற்றி வசன நடைப்படுத்துகின்றேம்: இக்காண்டமானது (1) குன்றக்குரவை, (2) காட்சிக்காதை, (3) கால்கோட்காதை, (4) நீர்ப்படைக்காதை, (5) நடுகற்காதை, (6) வாழ்த்துக்காதை, (1) வரந்தருகாதை என இளங்கோவடிகளால் ஏழு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது.