பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 சேர மன்னர் வரலாறு



சின்னட்குப் பின் நெடுஞ்சேரலாதன் அவர்க்குப் பொன்னும் பொருளும் நிரம்ப நல்கித் தானே காலின் ஏழடிப் பின் சென்று வழிவிட, கண்ணனார் தமது குமட்டூர்க்குச் சென்றார். அரசியற் சுற்றத்தாரும் அவர் செய்த தொண்டினைப் பாராட்டி அவரை மனம் குளிர்ந்து வாழ்த்தினர்.

குமட்டூர்க்குப் போந்த கண்ணனாரை ஏனைச் சான்றோர் கண்டு அளவளாவி இன்புற்றனர். உம்பற்காட்டு வேதியரும் தென்னாட்டுச் செல்வர்களும் அவரைச் சிறப்புடன் வரவேற்றனர். கண்ணனார் தம்முடைய நாட்டில் இனிது உறைவாராயினர்.


6. பல்யானைச் செல்கெழு குட்டுவன்

குட நாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல்யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக் குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாய் இருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும் மணல் பரந்த நாட்டுக்குப் பூழி நாடு என்று அந் நாளில் பெயர் வழங்கிற்று[1]. அந் நாட்டவர் பூழியர் எனப்படுவர். பூழி நாட்டவர் தமக்கு அம்மையில் நிற்கும் தென்மலைக் காட்டில் வாழும் யானைகளைப் பிடித்துப்


  1. Madras Manual Vo.iii.p. 283.