பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செல்வக்கடுங்கோ வாழியாதன் 229



மருதன் இளநாகனார் என்று சான்றோர் விதந்து கூறியிருக்கின்றார்[1].

அந்துவனது நல்லிசைப் புலமையை வியந்தே பதிற்றுப்பத்து ஏழாம் பதிகம், “நெடுநுண் கேள்வி அந்துவன்” என்று சிறப்பித்துரைக்கின்றது.

வேணாட்டில், ஒரு தந்தை என்ற பெயர் பெற்று அந்நாளில் வேளிர் தலைவன் ஒருவன் விளங்குகினான். அவனுக்குப் பொறையன்தேவி என்றொரு மகள் இருந்தாள். அவளை அந்துவன் மணந்துகொண்டு இனிதிருக்கையில், செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மகனைப் பெற்றான். அந்துவன் அரச வாழ்வு பெற்றும், புலவர் கூட்டத்தைப் பெரிதும் விரும்பி யொழுகினான். தமிழகத்தில் வாழ்ந்த சான்றோர் பலரும் அவன்பால் சென்று புலமை நலம் நுகர்ந்தும் நுகர்வித்தும் பரிசில் பெற்று மகிழ்ந்தனர்.

அந் நாளில், சேர நாட்டில் தெற்கில், தென்பாண்டி நாட்டில் உள்ள பொதியமலை, சான்றோர் பரவும் சால்புற்று விளங்கிற்று. அதனடியில் ஆய்குடி என்ற ஓர் ஊருண்டு. அஃது இப்போது தென்காசிப் பகுதியைச் சேர்ந்த செங்கோட்டை வட்டத்தில் ஆய்குடி என்ற அப் பெயர் திரியாமல் இருந்து வருகிறது. அவ்வூரைத் தலைமையாகக் கொண்டு அப் பகுதியை வேள் ஆய் என்ற வேளிர் தலைவன் ஆட்சி செய்து வந்தான். அவனை ஆய் அண்டிரன் என்றும் சான்றோர் வழங்குவர். அவன் இரவலர் வேண்டுவன ஈத்து இறவாப்


  1. அகம் 59.