பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278 சேர மன்னர் வரலாறு



புகழும் நின்பாலே எய்தியுள்ளன; இக் கொற்றவை எழுந்தருளியிருக்கும் இந்த அயிரை மலை போல நின் புகழ்கள் கெடாது நிலை பெறுக[1]” என்று வாழ்த்தினார்.

வாழ்ந்து முடிவில் பாணரும் கூத்தரும் பொருநரும் பிறரும் போந்து பெருவளம் நல்கப் பெற்றனர். ஊர் பெற்றவரும், யானை பெற்றவரும், குதிரை தேர் முதலியன பெற்றவரும் பலர். அதனைக் கண்டு மகிழ்ச்சி மீதூர்ந்த அரிசில் கிழார், விறலி யொருத்தியைப் பெருஞ்சேரல் இரும்பொறை பால் ஆற்றுப்படுக்கும் கருத்துடைய பாட்டு ஒன்றைப் பாடினார். அதன்கண், “தாமரையும் நெய்தலும் அரிந்து கொண்டு மகளிர் முல்லை நிலத்திற் புகுந்து கிளிகடி பாட்டைப் பாடும் வளஞ் சிறந்தது சேரமான் நாடு; பல்வகை வளம் நிறைந்த அந் நாட்டு ஊர்களைப் போர்வல்ல ஆடவரே காவல் புரிவர்; பேரூர்களைச் சூழ வில்வீரர் காக்கும் வளவிய காவற் காடுகள் உண்டு; அந் நாட்டில் எங்கும் பரந்து இனம் பெருகி மேயும் ஆடுகளைப் போலக் குதிரை களையும், ஆனிரைகளைப் போல் யானைகளையும் உடைய பெருஞ்சேரல் இரும்பொறையின் குன்று அதோ தோன்றும் குன்றின் பின்னே நிற்பது; அவன்பாற் சென்றால் அதனைப் பெறலாம் [2]“ என்று பாடினர்.

ஒருகால், இரும்பொறை தன் மக்கட்கு அறிவுரை வழங்கினான்; அரசிளஞ் சிறுவர்கள் கல்வியறிவு பெறுவதும் மெய்வலி பெறுவதும் அவர் தம் கோற்கீழ் வாழும் மக்கட்கு நலஞ் செய்தற் பொருட்டு என்றும்,


  1. பதிற். 79.
  2. பதிற். 78.