பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284 சேர மன்னர் வரலாறு



கருத்தையே முடித்துக் கொண்டாய். முன்னாள் கையில் உள்ளது போலக் காட்டி, மறுநாள் அது பொய்பட நின்ற உனது நிலைக்கு நீ சிறிதும் நாணுகின்றாயில்லை. நீ கேட்டு நாணுமாறு நின் புகழெல்லாம் நான் பலபட என் செந்நாவால் பாடினேன்; யான் பாடப் பாடப் பாடுபுகழ் பெற்றாய்; நல்லது; வணக்கம்; சென்று வருகிறேன்” என்று கை தொழுது சென்றார். அப்போது, அவன் “புலவீர், ஒன்றும் மனத்திற் கொள்ளலாகாது; சென்று வருக” என்றான். அந் நிலையினும் அவர், “வேந்தே , என் புதல்வனொடு வாடி வதங்கியிருக்கும் என் மனைவியையே நினைத்துக் கொண்டு செல்கின்றேன்; ஆதலால், நின் கொடுமையை நினைப்பதற்கு என் நெஞ்சில் இடமில்லை, காண்[1]” என்று சொல்லி விட்டுச் சென்றார். அது கண்டும் இரும்பொறையின் மனம் கற்பொறையாகவே இருந்தொழிந்தது.

பெருங்குன்றூர் கிழார் தனது பெருங்குன்றூர் அடைந்து சின்னான் இருந்துவிட்டுக் கொங்குநாடு கடந்து சோழ நாட்டுக்குச் சென்றார். அங்கே உறையூரின்கண் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி என்பவன் ஆட்சி செய்துவந்தான். சான்றோர் வரவுகண்ட சென்னியும் மிக்க அன்போடு வரவேற்று உரிய சிறப்புக்களைச் செய்தான். “வறுமை என்பது எத்தகைய அறிஞரது அறிவையும் கெடுத்துவிடும்; விருந்து கண்டு அஞ்சும் திருந்தா வாழ்வும் அதனால் உண்டாவது. யான் வறுமையுற்று வாடுகின்றேன்;


  1. புறம். 211.