பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை 343



என்றாலும் கூடாது; ஆகவே, சிறிதும் தாழாது பொருள் செறிந்த செய்யுள் பாடும் தீவிய செந்நாவினையும், மிக்க கேள்வியறிவினையும் விளங்கிய புகழினையும் உடைய கபிலர் இன்று உளராயின் நன்று என்று கூறுகின்ற நீ மகிழப் பகைவரை வஞ்சியாது பொதுவெல்லும் நின் வென்றிக்கு ஒப்பப் பாடுவேன்[1]” என்று பாடினர். எண்ணாது உரைத்ததற்கு மாந்தரன் மனம் நொந்து கீரனார்க்கு வேண்டிய பரிசில்களைச் சிறப்ப நல்கி மகிழ்வித்தான். இளங்கீரனார் வேந்தன்பால் விடை பெற்றுக் கொண்டு தமது பொருந்திலுக்குச் சென்றார்.


16. சேரமான் வஞ்சன்

மலையாளம் மாவட்டத்தில் வயனாடு எனப்படும் வட்டத்திற்குப் பண்டை நாளில் பாயல் நாடு என்று பெயர் வழங்கிற்று. இப்போதுள்ள குடகு நாடும் இந்தப் பாயல் நாட்டில்தான் அடங்கியிருந்ததென்று அந் நாட்டு வரலாறு[2] கூறுகிறது. குடகு நாட்டுக் கல்வெட்டுகளும் மேற்கு மலைத்தொடரின் இப் குதியதைப் பாயல் மலையென்று குறிக்கின்றன எனக் குடகு நாட்டுக் கல்வெட்டறிஞரும்[3] எடுத்துரைக்கின்றனர். இப்போதும் மலையாளம் மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் நாடு வட்டத்தின் ஒரு பகுதி, பாயல் நாடு எனவே வழங்குகிறது. கி.பி. 1887-ல் ஆங்கிலேயராட்சியில் பாயல் நாட்டின் பகுதிகளான உம்பற்காடு, சேரன் நாடு என்பன நீலகிரி மாவட்டத்தோடு இணைக்கப்பெற்றன[4].


  1. புறம். 51.
  2. Imp. Gazett. Mysore & Coorg p. 278-9.
  3. Coorg. Ins. Int. p. 2.
  4. Malabar Series. Wynad. p.5.