பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

398 சேர மன்னர் வரலாறு



ஆண்டுகட்கு முன்பிருந்தே சால்டியர், கிரேக்கர், யவனர், எகிப்தியர், சிரியர், பாபிலோனியர், கோசியர், பாரசிகர் முதலிய மேனாட்டவரும் வடபுல ஆரியரும் வந்து மக்களிடையே கலந்து கொண்டதனால் சேர நாட்டவர்களுடைய மொழியும் நடையும் உடற்கூறும் திரிந்து, தமிழ்நாட்டின்கூறு என்ற குறிப்பே தோன்றாதவாறு பெரிதும் மாறிவிட்டன.

இதுகாறும் கூறியவற்றால் பண்டை நாளைச் சேர மன்னர்கள், அறிவு, ஆண்மை , புலமை நலம் பெற்றுப் புலவர் பாடும் புகழ் பெற்று விளங்கியதும், நாடு காவல் புரிந்து நல்லிசை நிறுவியதும் ஒருவாறு காட்டப் பட்டமை விளங்கும். அவ்வேந்தர் செயல்வகைகளில் தமிழ் மொழியால் அவர்களுக்கிருந்த பற்று மிகுதி நன்கு விளங்குகிறது. அரசுக்குரிய வெற்றி முரசு இருக்கும் கட்டிலில் பிறர் யாரும் ஏறியிருத்தல் கூடாது; அஃது அரசைக் கைப்பற்றியது போலும் செயலாகும் எனவும், அப்படிச் செய்வோர் கொலைத் தண்டத்துக்கு உரியர் எனவும் தமிழரசு கருதியிருந்தது. தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை காலத்தில் மோசிகீரனார் என்ற தமிழ்ச் சான்றோர் முறைமை தெரியாமல் முரசு கட்டிலில் கிடந்து உறங்கிவிட்டார். செய்தி தெரிந்ததும் வேந்தன் சினத்துடன் அவரை நெருங்கினான். தமிழ் முழுதறிந்த சான்றோர் என்பது தெரிந்து அவருக்கு அவன் தன் கையில் விசிறி கொண்டு வீசலுற்றான். சான்றோர் விழித்தெழுத்து அவனுடைய தமிழன்பை வியந்து பாராட்டி அரசியல் அறிவுரை பல வழங்கினார் என்ற வரலாறு நாடறிந்ததொன்று. இதனால் சேர