பக்கம்:சேரமன்னர் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

நம் தமிழ் நாட்டின் வரலாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ந்து இயன்று வருவது உலகறிந்த செய்தி; எனினும் அக்கால நிகழ்ச்சிகளை வரன்முறையாக அறிதற்கேற்ற நூல்களும் வேறு குறிப்புகளும் போதிய அளவில் கிடைக்காமையின், சங்க இலக்கியங்கள் எனப்படும் தொகை நூல்களின் பாட்டுகள் தோன்றிய காலத்திருந்து நாம் அறிந்து கொள்ளுதல் ஓரளவு இயலுகின்றது. அக் காலத்தைப் பொதுவாகச் சங்க காலம் என்பது பெருவழக்காய் உளது. அதனால், தமிழ் நாட்டு வரலாறு சங்க காலம், களப்பிரர் காலம், பல்லவர் காலம், இடைக் காலம், பாண்டிய சோழர் காலம், விசய நகர வேந்தர் காலம், முகமதிய ஐரோப்பியர் காலம், மக்களாட்சிக் காலம் என வகுத்துக் காணப்படுகிறது. ஆனால், இம் முறையில் வைத்துத் தமிழ்நாட்டு வரலாறு இன்னும் எவராலும் எழுதப்படவும் இல்லை ; அதற்குரிய முயற்சியும் இன்றுகாறும் உருவாகவுமில்லை. தமிழ் மக்கட்கு அறிவியல் வாழ்வில் உண்டான வீழ்ச்சிக்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ?

இனி, சங்க காலம் என்பது தமிழ் நாட்டின் சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தரும் வாழ்ந்த காலமாகும். இக் காலத்தைக் காலஞ் சென்ற திரு. வி. கனகசபைப் பிள்ளை முதல் பலர் ஆராய்ந்து எழுதி யுள்ளனர். களப்பிரர் காலம் இதுகாறும் எவராலும் தெளிவாக விளக்கப்படவில்லை. பல்லவர் காலம்