பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

சைவ இலக்கிய வரலாறு

தற்கு வேண்டும் குறிப்புக்கள் வேறெங்கும் காணப்படவில்லை. அதனால், அவருடைய திருப்பதிகங்களே அவரது சமண்சமயவாழ்வை அறிதற்கு இடமாகின்றன. அவற்றைத் துணையாகக் கொண்டு நோக்குங்கால் அடியிற்கண்ட வகையில் அவ்வரலாறு காணப்படுகிறது.

திருநாவுக்கரசர் சமண் சமயம் புகுந்ததன் நோக்கம் கூற வந்த சேக்கிழார், "நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் என்று அறத்துணிந்து, சமயங்களானவற்றின் நல்லாறு தெரிந்து உணர்ந்தும் நம்பர் அருளாமையினால்"[1] சமண் சமயம் குறுகினர் என்றார். திருநாவுக்கரசரும் “உய்யலாம் எண்றெண்ணி”[2] அச்சமயம் புகுந்ததாகக் கூறுகின்றார். அந்நாளில் சமண் துறவிகள் தமக்கெனச் சிறந்த கொள்கையும் கோலமும் உடையும் உடையராயிருந்தனர், தங்கள் தலைமயிரைத் தாமே பறித்துக்கொள்வதும், மகளிர் சிலர் முறையாக வந்து “எம்தெய்வம்”[3] என்று மயிர்பறிக்கப் பறிப்புண்பதும், ஆடையின்றியும், பாயுடுத்தும், பீலி கையிலேந்தியும் திரிவதும் இயல்பு. மேனியிற் கடுப்பொடியைப் பூசிக்கொள்வதும் உண்ணுங்கால் நின்றுண்பதும், உரையாடாது நிறைய உண்பதும், பிறவும் அவர்களுடைய கொள்கைகள்.

திருநாவுக்கரசர் சமணராயிருந்தபோது, மகளிர் கண்டு காணத்தக்க கோலம் கொண்டார். பேரூர் தெருக்களில் இவர் வரக்கண்டால், மகளிர் விரைந்து தம் மனைக்குட் சென்று கதவைத் தாளிட்டுக் கெண்டனர். தனது தலைமயிரைத் தானே தன்கையால் “கண்ணழலப்”[4] பறித்தெறிந்தனர். சமண் சமயத்துத் துறவுக்கோலத்திலும் கொள்கையிலும் பேரீடுபாடு கொண்டு இனிதொழுகிய இவருக்கு அவர்கள் பால் உண்டாகிய அன்பு பெரிதாகும்; அதனல், அவர்களிடம் பெருநூல்கள் பல பயின்று கல்விச் செருக்கு மிகுவதாயிற்று. "ஒர்த்து உளவாறு நோக்கி உண்மையை யுணராத"[5] சமண் சான்றோர் கூற்றுக்கள் நாவரசருக்கு


  1. திருநாவுக். புரா. 37.
  2. திருநாவுக். தேவாரம். 5 : 1.
  3. ௸ 217 : 11.
  4. ௸ 5 : 7.
  5. ௸ 73 : 2,