பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

சைவ இலக்கிய வரலாறு

"ஆகமசீலர்க்கு அருள் நல்கும் பெம்மான்" [1]என்பதனால் இனிது விளங்குகிறது. இவ்வண்ணம் ஆகமநூலின் தோற்றமும் பயனும் நம்பியாரூரர் எடுத்தோதுதற்கு ஏற்ப அவர் காலத்து வேந்தனை கழற்சிங்கன் தன்னை "ஶ்ரீஆகமப்பிரியன் ”[2] என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது. இனி, "மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறி காட்டும் வேதமுதலாக " [3]விளங்குதலால் அம்மெய்ந்நெறி, யோகநெறி, ஞானநெறி என இரண்டாய் இயலுவதைக் காட்டி, யோகநெறி நிற்கும் உயிர்கட்கு அருளும் திறத்தைப் பல பாட்டுக்களால் எடுத்துரைக்கிறார். இறைவன் உள்ளத்துள்ளே நிற்கும் ஒண் பொருள் ; அவனை உள்ளத்துள்ளே ஒர்ந்து உணர்வது யோகம்;[4] அவ்வாறு உணர்வார்க்கு அவன் "நாபிக்கு மேலே ஓர் நால்விரல் நடு [5]விற் காட்சியளிப்பன் ; அவ் விடத்தேயவன் சிந்தித்து என்றும் நினைந்தெழும் அன்பர் சிந்தையில் திகழ்கின்றான்;[6] அவ்வாறு திகழ்வதால் சிந்திக்கும் அன்பரது சிந்தை திருத்தம் எய்துகின்றது.[7] ஞான நெறியென்பது, இறைவன்பால் உண்மையன்பு கொண்டு தொழுதல் வணங்குதல் பாடுதல் முதலியவற்றால் வழிபடுவதாகும். யோகநெறியினும் இந்த ஞானநெறி பெரும் பான்மையான மக்கட்கு எளிதில் இயலும் செயலாதலால் இதனையே தாம் அருளிய திருப்பாட்டுக்கள் பலவற்றிலும் பெரிதும் எடுத்து மொழிந்துள்ளார். நறிய பூவும் நீரும் கொண்டு இறைவனை நாடொறும் அன்புடன் பூசனை புரிபவர்க்குத் தூய அறிவுண்டாகும் ; உண்மை ஞானம் கைவரும் என்பாராய், "நறுமலர்ப்பூவும் நீரும் நாடொறும் வனங்குவார்க்கு, அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பன்"[8] என்றனர். இறைவன்பால் அன்பில்லாத வழி அவனது திருவடி ஞானம் எய்தாது என்பதை, "அன்பரல்லால்


  1. 1. சுங். தே. 96: 6.
  2. 2. S. I. I. Vol. I. No. 25 & 26.
  3. 3. சுங், தே. 40; 10.
  4. 4. சுங். தே. 45 : 4.
  5. 5. ௸ 45:9
  6. 6. ௸ 61:8
  7. 7. ௸ 47:8
  8. 8. ௸ 8:3