பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

462

சைவ இலக்கிய வரலாறு

கொந்துஇறைஞ்சிக் கமழ்கோதை குலாவிக்
        குழல்அவிழப்
பந்து இறைஞ்சிப் பிடிப்பாள் இடைக்கே
சென்று பற்றுண்டதே”[1]

என்று சொல்லி அவலிக்கின்றான். அவனே பின் இடந்தலைப்பாட்டின்கண் அவளைத்தனித்துக் காண்கின்றான். அவள் நலம்பாராட்டக் கருதிய அவன், “அவள் இடையோ மிகவும் மெல்லிது; அதனை எண்ணாமல் அவள் பெற்றோர், இடையைவருத்தி மெலிவித்துப் பெருத்திருக்கும் மார்பின் மேல் மணிமாலைசூட்டி, அல்குலிடத்தே ஆடையணிந்துவிட்டனர்; இவற்றின் சுமை தாங்காது இடை மிகவும் மெலிந்து துவண்டொழிந்தது; இனி, பூவின் இதழ் தங்கினும் அது தாங்காமல் ஒடிந்து விழும் என்பது கருதாது பூக்களைக் கூந்தலில் அணிந்துள்ளனர் நின் பெற்றோர்; நின் இடைக்கும் இளையவர்க்கும் அவர்கள் பகை கொண்டவரோ? கூறுக” என்பான், அவள் பெற்றோரைப் பழிப்பது போலப் புகழும் கருத்தை உட்கொண்டு,

“அடைக்கும் கதிர்மணி ஆரம் முலைக்கணிந்து
        அல்குல்மெல்லம்
புடைக்கும் கலைபுனைந் தோதியிற் போது
        பொதிந்துவிட்டார்
விடைக்கும் உமைக்கும் நற்பாகன் சிராமலை
        மெல்லியலீர்
இடைக்கும் இளையவர்க்கும் பகையோ நும்மை
        ஈன்றவரே”[2]

என்று இயம்புகின்றான்.

பின்னர் இருவரும் மணம் செய்துகொண்டு மனைவாழ்க்கை நடத்தி வருகையில், அவ்விளையோன் வினை மேற்கொண்டு பனிக்காலத்தே வருவன் எனக் கூறிப் பிரிந்தான். பனிப்பருவம் வருதலும் அவள் வருத்தமுற்று வருந்தும் திறத்தை நம் வேம்பையர்கோன், அவள் கூற்றில் வைத்து,


  1. 1. சிராமலை யந். 89.
  2. 2. ௸ 92.