பக்கம்:சைவ இலக்கிய வரலாறு-கி. பி. ஏழு முதல் பத்து வரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

இலக்கிய வரலாறு

ஞானமுனிவன்”[1] என்றும் பல திருப்பதிகங்களிற் குறிக்கின்றார். இவ்வண்ணம் கலைஞானமும் உண்மை ஞானமாகிய இயல்ஞானமும் சிறக்கப்பெற்றிருப்பதை நுணுகிக் கண்டதிருத்தொண்டர் புராணமுடையார், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனையற மாற்றும் பாங்கினில் ஒங்கிய ஞானம், உவமையிலாக் கலை ஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம், தவமுதல்வர் சம் பந்தர் தாமுணர்ந்தார்”[2] என்று கூறுவதும், ஞானசம்பந்தர் தாமே தம்மைச் “சிவஞானசம்பந்தன்”[3] என்றும், “மறை சேர்வருங் கலைஞானசம்பந்தன்”[4] என்றும் கூறுவதும் ஒப்பு நோக்குவார்க்குச் சேக்கிழார் கூறியது மிக்க பொருத்தமாக இருப்பது இன்பந்தருவதொன்று.

பதிகம் பாடிய காரணம்

இவ்வண்ணம் பல்வகை ஞானங்களால் உயர்ந்த திரு ஞானசம்பந்தர் தாம் தமிழில் திருப்பதிகங்கள் பாடுதற்குரிய காரணத்தையும் ஒரளவுவிளங்கக் கூறியுள்ளார். “ஞாலம் மிக்க தண்டமிழால் ஞானசம்பந்தன் சொன்ன கோலம் மிக்க மாலை”[5] என்றும், “கழுமலநகர்ப், பழுதில் இறையெழுதுமொழி தமிழ்விரகன்”[6] </ref> என்றும் கூறுவன, தமிழ் எழுதாமொழியாகாது எழுதுமொழியென்பதும், எளிதில் மக்கள் உள்ளத்தைக் கசிவிக்கும் இயல்புடையதென்பதும், இயல்பாகவே தன்பால் இன்பம் ஊற விளங்குவதென்பதும், இம்மொழியே நாட்டில் மேன்மை மிக்கு விளங்கிற்றென்பதும், இத்தமிழ்க்கே தமக்குக் கிழமை மிகவுண்டென்பதும், அதன்கண் தமக்கு வன்மை மிக உண்டென்பதும் வற்புறுத்தி, ஞானசம்பந்தர், தமிழால் தம்முடைய திருப்பதிகங்களைப் பாடுதற்குற்ற காரணத்தைப் புலப்படுத்தியுள்ளனர்.

.


  1. ஞானசம். 221.
  2. பெரிய பு. திருஞான. 139.
  3. ஞானசம். 175.
  4. ஞானசம். 77.
  5. ஞானசம். 51:11
  6. ஞானசம். 325:12