பக்கம்:சைவ சமய வளர்ச்சி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பல்லவர்க்கு முற்பட்ட சைவ சமயம் (கி.பி.300க்குமுன்)

இப்பகுதியில் நமது நோக்கம்

வெரலாற்று ஆசிரியர் கணக்குப்படி பல்லவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-900 ஆகும்; பிற்பட்ட சோழர் காலம் கி.பி. 900-1300 ஆகும்: ஆதலின் நாம் முதலில் பல்லவர் காலச் சைவ சமய வளர்ச்சியை ஆராய வேண்டும். ஆயின், அதனை ஆராய்வதற்குமுன், பல்லவர்க்கு முற்பட்ட தமிழகத்தில் சைவ சமயம் எவ்வாறு இருந்தது என்பதை அறியக் கடமைப்பட்டவராவோம்.அஃது அறியப்படின், அது பல்லவர் காலத்தில் எப்படிவளர்ச்சியுற்றது என்பதைப் பல்லவர் காலச் சான்றுகளைக் கொண்டு அறியலாம். * -

பல்லவர்க்கு முற்பட்ட தமிழ் நூல்கள் எவை?

சமுத்திரகுப்தன்தட்சிணத்தின்மீது படையெடுத்து வந்தபோது, காஞ்சியை விஷ்ணுகோபன் என்ற பல்லவன் ஆண்டுவந்தான் என்று அக் குப்தனது அலகாபாத் தூண் கல்வெட்டுக் கூறுகிறது. அக் காலம் ஏறத்தாழக் கி.பி. 340-350 என்னலாம். இதனால் கி.பி. 4-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழகத்தின் வட பகுதி ஆகிய தொண்டைமண்டலம் பல்லவர் என்ற அரச மரபினர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பது திட்டமாகத் தெரிகிறது.

காஞ்சியிலிருந்து முதன் முதல் பட்டயம் விடுத்த சிவஸ்கந்தவர்மன் என்ற முதற் பல்லவன், ஏறத்தாழக் கி.பி. 3-ஆம் நூற்றாண்டினன் என்று ஒருசார் ஆராய்ச்சியாளர் கூறுவர்; பிறிதொரு சார் ஆராய்ச்சியாளர் வேறு சில காரணங்களைக் காட்டி, 'சிவஸ்கந்தவர்மனே காஞ்சியைக் கைப்பற்றிய குமாரவிஷ்ணு ஆவன். அவன் காலம் ஏறத்தாழக் கி.பி. 325-350 என்பர். வேறொரு சார் ஆராய்ச்சியாளர் வேறு சில காரணங்களைக் காட்டிச் சிவஸ்கந்தவர்மன் காலம் ஏறக்குறையக் கி.பி. 300-325 என்பர். இவை அனைத்தையும் காண, தொண்டைநாட்டில் பல்லவர் ஆட்சி ஏறத்தாழக் கி.பி.300-இல் தொடங்கியிருக்கலாம் என்று கொள்வது பொருத்தமாகும்.

ஏறத்தாழக் கி.பி. 300-இல் தொண்டைநாட்டைக் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பல்லவர், கி.பி. 900-ம் வரை தென்னிந்தியாவில் பேரரசராக இருந்தனர், சேர-சோழ-பாண்டியருடன் போரிட்டனர்