பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

17


உடல்வெம்மை நீங்கத் தண்ணிலவு பொழியும் வென் திங்களையும் கண்கண்ட தெய்வங்களாகக் கொண்டு போற்றி வழிபடுவாராயினர். ஞாயிறு திங்கள் தீ என்னும் இயற்கைப் பொருள்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் ஒளி வழிபாடுகளுள் முதற்கண்ணதாகிய ஞாயிற்று வழிபாடு என்பது உலகிற் பல சமயத்தாராலும் பன்னெடுங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொதுமை வாய்ந்ததாகும். இவ்வுண்மை,

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரும்

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு

ஒவற விமைக்குஞ் சேண்விளங்கவிரொளி"

எனச் செம்புலச் செல்வராகிய நக்கீரனார் தம்மாற் போற்றப் பெறும் முருகப்பெருமானது திருமேனியின் பேரொளிக்கு உவமையாக எடுத்தாளும் ஞாயிற்றினைப் பலர் புகழ் ஞாயிறு என அடைகொடுத்து ஒதினமையால் இனிது புலனாகும். பலர் புகழ் ஞாயிறு என்னும் இத்தொடர்க்கு ‘எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிறு என நச்சினார்க்கினியர் பொருள் வரைந்துள்ளார்.’ ஆசிரியர் தொல்காப்பியனாரும் தெய்வஞ்சுட்டிய பெயர்நிலைக் கிளவிகளுள் ஒன்றாக ஞாயிறு என்னும் பெயரைக் குறித்துள்ளார். எனவே ஞாயிற்று வழிபாடு என்பது உலக முழுவதும் பரவி வாழும் எல்லாச் சமயத்தாராலும் மேற்கொள்ளப் பெற்றுவரும் பொதுமை வாய்ந்ததாகப் பண்டைத் தமிழ் மக்களாற் கொள்ளப்பெற்றதென்பது நன்கு புலனாகும்.

பகல் செய்யும் ஞாயிற்றையும் இரவில் தண்ணொளி பரப்பும் திங்களையும் கடுங்குளிரை நீக்கி உணவினைப் பதஞ்செய்யும் தீயினையும் தெய்வமாகக் கருதிப் போற்றும் இயற்கைப் பொருள் வழிபாடு உலக மக்களிடையே முதன் முதல் தோன்றியிருத்தல் வேண்டும் என்பது உலகிற் பல

21. திருமுருகாற்றுப்படை 1-3.

22. நச்சினார்க்கினியர் உரை, திருமுருகாற்றுப்படை, 2.

23. தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல். கிளவியாக்கம், நூ. 57.

சை. சி. சா. வ. 2