பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கவிலக்கியத்திற் சிவன் வழிபாடும் சைவசமயத் தத்துவ...

351


வாய்மொழியும் தமிழரது ஒரு தெய்வக்கோட்பாட்டினை நன்கு வலியுறுத்துதல் இங்கு நினைக்கத் தகுவதாகும். காண்டற்கரிய கடவுளாகிய அவ்வொரு பொருளே, உலகுயிர்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்து நிற்கும் நிலையிற் 'சிவம்’ எனவும், அதுவே உலகெலாமாகிவேறாய் உடனுமாய் இவ்வாறு மன்னுயிர் களின் பொருட்டு அருளாய் விரிந்து உலகுயிர்களுடன் இரண்டறக் கலந்து நின்று உயிர்களை உய்வித்தருளும் நிலையிற் சத்தி எனவும் இருநிலையில் வைத்துப் போற்றப் பெறுகின்றது. உலகப் பொருளை விளக்கும் ஞாயிறு ஒன்றே தன்னிலையில் தனித்து விளங்குந்திறத்திற் கதிரவன் எனவும் உலகப் பொருள்கள் தோறும் இரண்டறக் கலந்து நிற்குந் திறத்திற் கதிர் எனவும் இருதிறமாகப் பிரித்துப் பேசப்படுதல் போன்று முழுமுதற் பொருள் ஒன்றுதானே தனித்து நிற்குந் தன்னிலையிற் சிவம் எனவும், உலகுயிர்களுடன் விரவி நிற்கும் நிலையிற் சத்தி எனவும் இருதிறமாகப் பகுத்துப் பேசப்படுவதாயிற்று.

இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவனும் என இரு நிலைமையதாக வைத்து எண்ணிப் போற்றுதல் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவிவரும் கடவுள் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மை மரபு, 'நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன்’ என ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், சேர்ந்தோள் உமையே என அகநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் பெண்ணுரு வொரு திறனாகின்று அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்’ எனப் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும் இடம் பெற்றுள்ளமை காணலாம். இம்மரபினை யடியொற்றியதே திருக்குறள் கடவுள் வாழ்த்தில் வரும் ஆதிபகவன் என்னும் திருப்பெயராகும். உயிர்ப் பொருள் உயிரல் பொருள் ஆகிய எவ்வகைப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ்சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கியருள் புரிகின்றான் என்பது நீல மேனிவாலிழை பாகத்து ஒருவன் இருதாள் நிழற்கீழ் மூவகையுலகும் முறையே முகிழ்த்தன.