பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நிற்கும் இப்பெற்றியை அத்துவிதம் என்ற சொல்லால் வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும்.

குறைவிலா நிறைவாகிய முதல்வனுக்கு ஒன்றை விரும்புதலும் வெறுத்தலும் ஆகிய குற்றங்கள் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனாகிய இறைவன் திருவடியைச் சேர்ந்தார்க்கும் விருப்புவெறுப்பு என்னும் அவ்விருகுற்றங்களும் இல்லாதொழிதலால் அவை காரணமாக வரும் பிறவித்துன்பங்களும் அவர்கட்கு எக்காலத்தும் உளவாகா என்பர்,

“வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்

கியாண்டும் இடும்பை யில’ (திருக் கட. வா. 4)

என்றார் திருவள்ளுவர்.

இறைவனது பொருள் சேர்ந்த புகழ்த்திறங்களை எக்காலத்தும் விரும்பிப் போற்றுவார்க்கு அகவிருளாகிய ஆணவத்தைப் பற்றிவரும் நன்றும் தீதும் ஆகிய இரு வினைகளும் உண்டாக மாட்டா என அறிவுறுத்துவது,

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ (திருக் கட. வா. 5)

எனவரும் திருக்குறளாகும். இதன்கண் இருள்” என்றது அவிச்சையாகிய மயக்கத்தை எனவும் பொருள்” என்றது மெய்ம்மையை எனவும் கொண்டு, "மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னும் இரண்டு வினையும் உளவாகா, இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து” எனப் பரிமேலழகர் உரை வரைந்துள்ளார். “இன்ன தன்மைத் தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்” என்றும் நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் இருவினையுஞ்சேரா என்றும் கூறினார். இறைமைக்குனங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழெனப்பட்டது. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல்”