பக்கம்:சொன்னார்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69


நாம் படித்தது கொஞ்சமாக இருந்தாலும் நமது சந்ததியாராவது நிறையப் படிக்க வேண்டும் என்பதற்காகவே கல்வி அமைச்சராக இருக்கிறேன்.

—பக்தவத்சலம் (11-12-1962)


நான், சென்ற 20-ஆண்டுக் காலமாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, செளத்சீ, அயர்லாந்து, தென் அமெரிக்கா முதலிய நாடுகளில் குஸ்தி போடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறேன். மரக்கறி உணவுகளைத் தவிர வேறு ஒன்றையும் நான் சாப்பிடுவதில்லை. மதுபானமாவது சுருட்டாவது குடிப்பதில்லை; திறந்த வெளியிலுள்ள சுத்தமான காற்றில் எனக்கு நம்பிக்கை உண்டு. நான் பஞ்சாபிலுள்ள காமா பயில்வானத் தோற்கடிக்கலாம் என்ற முழு நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன். அதன் பிறகு, இந்தியாவிலுள்ள மற்ற மல்யுத்தக்காரர்களையும் போட்டிக்கழைக்கப் போகிறேன்.

—ஸ்பிஸாக் (20-1-1938)

(குஸ்தி பயில்வான்)

(பம்பாயில்)

நான் சமீபத்தில் இந்தியாவில் பிரயாணம் செய்ததிலிருந்து இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி போதிக்கச் செய்யப்படுகின்ற முயற்சிகளை மிகவும் அனுதாபத்துடன் கவனித்து வருகிறேன். இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்வந்தாலொழிய இந்தியாவின் பெருமை விளங்காதென்பதை இந்திய ஆண்கள் உணர்தல் வேண்டும். இந்தியாவில் மிகவும் உயர்ந்த நிலையிலுள்ள வகுப்பாருள்ளும் மிகவும் தாழ்ந்த நிலையிலுள்ள வகுப்பாருள்ளும் கல்வி பரவ வேண்டு மென்று விரும்புகிறேன். ஆங்கிலம் உலக மொழியாக இருப்பதால், பெண்களுக்கும் ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டும்.

—கார்வி (8-7-1929)

(ஈஸ்டு இந்திய சங்கத்தில் பேசியது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொன்னார்கள்.pdf/71&oldid=1014699" இலிருந்து மீள்விக்கப்பட்டது