பக்கம்:சொன்னார்கள்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


கலைஞன், கவிஞன், எழுத்தாளன் ஆகியோர் எப்போதும் வறுமையில் உழல்வதற்குக் காரணம் தம்மைப்பற்றி அவர்கள் சிந்திக்காததாலும், அவர்கள் வயிற்றைப் பற்றி உலகம் சிந்திக்காததாலுமேயாம்!

—அரு. ராமநாதன்


1946—ஆம் ஆண்டு. அப்போதுதான் திருமணம் செய்துகொண்ட என் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் தன் வீட்டிற்குப் புறப்பட்டார். அவர்களுடன் வந்த நானே வண்டியோட்டிக் கொண்டு கிளம்பினேன். எங்கள் எதிர் காலத்தைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டு வந்தோம். அவரிடம் நான் சொல்லியதை இப்போது நினைவு கூர்கிறேன். நம் நாட்டில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டு எல்லாத் தொழில்களும் தேசியமயமாக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, என்னிடம் ஹெவி எண்டார்ஸ் மெண்ட் உள்ள மோட்டார் லைசன்சு இருக்கிறது. ஆக கம்யூனிச நாட்டிலும் வேலை கிடைக்கும் என்று கூறினேன்.

—நா. மகாலிங்கம்

(தொழிலதிபர்)


என் வாழ்க்கையில் ஆழ்ந்த பெருந்துன்பம் என்பது ஒரே ஒரு தடவைதான் வந்தது. அதாவது, என் மனைவி இறந்தபோது.

—டாக்டர் விஸ்வேஸ்வரையா


நான் சிறுவனாக இருந்தபோது தான் என் தகப்பனார் அல்லாமா ஆ, கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் அரபு மொழியிலிருக்கும் குரானைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலையை எடுத்துக் கொண்டார். அவரோடு கூடவே இருந்ததனால் அதிலே எனக்கு ஒரு ஈடுபாடு வந்துவிட்டது. நாற்பது முறைகளுக்கு மேல் என் கையாலேயே குரான் முழுவதையும் எழுதியிருக்கிறேன்.

—முஸ்லீம் கட்சித் தலைவர் ஏ. கே. ஏ. அப்துல் சமத்