பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

சொன்னால் நம்பமாட்டிர்கள்



விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள் என்னைத்தோளில் தூக்கிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள் சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத் தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்ரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும் தீ வைத்தார்கள்.

அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம் பித்தார்கள். அப்பொழுது நான் குறுக்கிட்டு “அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய ஒத்தாசை செய்திருக்கிறார்கள்” என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம் போட்டார்கள்.

நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள், நமது சுதந்திர போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள். அவர்களை ஒன்றும் செய்யவேண்டாம். இதோ அவர்களது உடைகள் என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக் காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டு பொசுக்கித் தங்கள் கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.

பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும், அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக் குண்டுகளை இன்னொருவரும் துக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளைக் கையில் ஏந்திக்கொண்டு சிப்பாய்களைப் போல் நடந்தனர்.