30
(வெற்றிவேலன் அரண்மனை—பாசறைக்கூடம்)
மாசிலாமணி: இங்கு கைலாயம். இங்கு வைகுந்தம்
வெற்றிவேலன்: (படத்தைப் பார்த்தபடி) ஆமாம் பிரம்மலோகம்! இந்திரலோகம்! இதெல்லாம் என்ன?
மாசிலாமணி: சொர்க்கவாசல்—மன்னா! மக்கள் கண் முன், சொர்க்கலோக மகிமையைக் காட்ட விரும்புகிறார் அருமறையானந்தர். இந்தத் திட்டப்படி ஒரு பிரம்மாண்டமான ஆலயம் அமைத்து......
சிறபி: புதிய ஆலயமா?
மாசிலாமணி: பல கோயில்கள் உள்ளன. ஆனால் இது பத்தோடு பதினொன்று அல்ல. நமது புராதன மார்க்கப் பாதுகாவல் கோட்டை! கைலாயத்தை யார் கண்டார்கள்? வைகுந்தம் யார் கண்டது! என்று பேசும் விதண்டாவாதிகளின் வாய்க்கொழுப்பை அடக்க, இந்த ஏற்பாடு. "முட்டாளே! இதோ பார், இவ்விதம் கான் கைலாயம் இருக்கும். வைகுந்தத்தின் வசீகாத்தைப் பார்" என்று ஏடுகளைக் காட்டுவதைவிட இப்படி ஒரு இடமே அமைத்துக் கட்டினால், மந்தமதியினரும், புரிந்து கொள்வார்களல்லவா?
வெற்றிவேலன: உண்மைதான்!
மாசிலாமணி: உள்ளத்திலே உயர்ந்த எண்ணம் மலரும்.
சிறபி: புதிதாக இதுபோலக் கட்ட திட்டமா?
மாசி: திரு அருளின் துணைகொண்டு அருமறையானந்தர் இந்தப் புனித காரியத்தைத் துவக்கிவிட்டார்.
வெற்றி: அருமையான ஏற்பாடு...நானே பிரபுக்களுக்குச் சொல்கிறேன் சொர்க்கவாசல் மகிமை பற்றி தாராளமாகக் காணிக்கை தருவர்...
மாசி: அவ்வளவு சிரமம் தங்களுக்குத் தரவேண்டுமா?
வெற்றி: சிரமமா? என் கடமை அல்லவா?
சிறபி: பிறகு வருகிறேன் மன்னா! வணக்கம்.
மாசி: காணிக்கை தரவேண்டும் என்று தாங்கள் கூறுவதைவிட...
வெற்றி: வேறுமுறையிருந்தால் சொல்லுங்கள் செய்வோம்.