பக்கம்:சோனாவின் பயணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஆடு, பன்றி, மான், நரி போன்ற மற்ற மிருகங்களும் சிரிக்க ஆரம்பித்தன. அவை சோனாவைச் சுற்றி நின்று கொண்டு கேலி செய்ய ஆரம்பித்தன.

“உன் பெயர் என்ன? உன் முதுகிலே பெரிதாகப் புடைத்து இருக்கிறதே, அது என்ன? இனி, உன்னை நாங்கள் கூனன் என்று தான் கூப்பிடுவோம்.” என்று கூறி பன்றி சிரித்தது.

“இல்லை, இல்லை. நாம் இதைத் தட்டைக் கால் என்று கூப்பிடுவோம். இதோ பாருங்கள், அருவருப்பான, நீளமான கால்கள், வேடிக்கையான தட்டையான பாதங்கள்?” என்று கூறியது ஆடு.

ஆடு இப்படிக் கூறிக் கொண்டே மேலும் கீழும் குதித்த வாறு அழகான தன் மெல்லிய கால்களைக் காட்டியது.

“இதனுடைய நெட்டைக் கழுத்தைப் பற்றி என்ன சொல்வது??’ என்று கூறிச் சிரித்து விட்டு, “இதனுடைய வாலைப் பார்த்தீர்களா?” என்று கூறிச் சோனாவின் குட்டையான வாலைச் சுட்டிக்காட்டியது நரி. பிறகு, “என்னுடைய அழகான வாலைப் பாருங்கள்” என்று பெருமையுடன் கூறித் தன்னுடைய அடர்த்தியான வாலை அசைத்துக் காட்டியது.

“ஏன் அதைக் கேலி செய்கிறீர்கள்? என்னுடைய வாலைப் பாருங்கள், இதுவும் அது மாதிரி சின்னதுதான்” என்றது, அன்பும் பண்பும் கொண்ட மான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோனாவின்_பயணம்.pdf/14&oldid=482911" இலிருந்து மீள்விக்கப்பட்டது