பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி ஒலிகளும், வேதம் ஓதுவார்களின் குரல் ஒலிகளும், மடவாரின் சிலம்புகளின் ஒலியும், கடல் ஒலியும் விளங்கப்பெற்றது நாங்கூர் (5). செந்நெற் பயிர்களை அறுவடை செய்யுங்கால், அவற்றைப் பிடிக்கின்ற பிடியில் தாமரைகளும் மீன்களும் சேர்ந்து பிடிபட்டு அறுக்கப்பெறுங்கால் அவற்றின்று உதிர்ந்த முத்துகள் வலைச்சியர்களால் வாரித் திரட்டப்பெறுகின்றன. நாங்கூர் அருகில் கடல் உள்ளதால் கடலலைகள் இங்கே வந்து கூடும்; அலைகளுடன் முத்துகளும் வந்து சேரும். அவை மீன்களின் வயிற்றிலே புகும்; அவை அறுவடையில் வெளிப்படுகின்றன (6). புனல் அலையெறிந்து துறைகள்தோறும் முத்துகள் தள்ளிக் கிடக்குமிடம் (7). சோலைகளில் பறவைகளின் ஒலிகளும் அப்போதலர்ந்த செவ்விப் பூக்களில் வண்டுகள் தேனைப் பருகின களிப்புக்குப் போக்கு வீடாகச் செய்யும் இன்னோசைகளும் கேட்கப் பெறுகின்றன (8). காவிரி ஆறு சந்தன மரங்களையும், அகில் மரங்களையும், நவரத்தினங்களையும் தள்ளிக்கொண்டு வந்து சோலைகளிலும் வயல்களிலும் அவற்றிற்குச் செழிப்பினை உண்டாக்குகின்றது (9). அடுத்து ஆழ்வார் காட்டும் நகர்வளத்தைக் காண்கின்றோம். மிக்கப் புகழ்படைத்த வேதியர்கள் வாழ்கின்ற ஊர் திருநாங்கூர் (1). இவர்கள் சாத்திரங்களை நன்கு கற்றவர்கள்; ஆன்ம குணம் நிறைந்தவர்கள் (2). அழகிய மகளிர் நிறைந்து வாழுமிடம் (3). மனத்தாலும் வாக்காலும் பகவானது மந்திரங்களையும், நான்மறைகளையும், வேதாங்கங்களையும், மற்றுமுள்ள கலை களையும் கரைத்துக் குடித்த ஆசாரம் நிறைந்தவர்கள் வாழுமிடம் (7). கொடிகள் பொதிந்த மதில்களும், மாடமாளிகைகளும், கோபுரங்களும் நெருங்கிய மணிமயமான மண்டபங்களும், அறச்சாலைகளும், கும்பல் கும்பல்களாக அந்தணர்களும் நிறைந்திருக்கும் ஊர் (8). பரம வைதிகர்கள் சிறந்த மலர்களைக் கொண்டு எம்பெருமான் திருவடிகளே சரணம் எனக் கூறி அருச்சிக்கும் அந்தணர்கள் வாழுமிடம் (9). வேதம் ஓதுவதில் நான்முகனையும் அழகில் முருகனையும் ஒத்திருக்கும் அந்தணர்கள் நிறைந்திருக்கும் ஊர் (10). இனி, இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் பெருமைகளில் ஆழங்கால்படுவோம். குற்றம் குறைகட்குக் கொள்கலனாயிருப்பவர்கள் அஞ்சிக் கிடவாமல் சேதநர்கள் எவ்வளவு அபராதங்கள் புரிந்திருந்தாலும் அவற்றை நற்றமாக எடுத்துரைக்க வல்ல பெரிய பிராட்டியாரும் அவற்றைப் பொறுப்பிக்க வல்ல பூமிப் பிராட்டியாரும் ஒரு நொடிப்பொழுதும் எம்பெருமானை விட்டுப் பிரியாமல் இருக்கும் இருப்பைப் பேசுகின்றார்.