பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிச் சீராமவிண்ணகரத் தாடாளன் 17 மார்பைப் பிளந்து அவனை முடித்தருளிய மாவீரன் (4). சத்திரியர்களை இருபத்தொரு தலைமுறை கொன்று அவர்தம் குருதியால் தம் வமிசத்தில் மாண்டவர்கட்குத் தர்ப்பணம் செய்த பரசுராமனாக அவதரித்தவன். குவலயா பீடம் என்ற யானையைக் கொன்றொழித்தவன் (5). வாலி, கவந்தன், விராதன் இவர்களை வானுலகத்திற்கு ஏற்றியவன் (6). இராவணனுடைய பத்துத் தலைகளும் புற்று சரியுமாப்போலே கீழே இற்று விழச் செய்தவன் (7). அழகெலாம் திரண்டு திகழும் சத்தியபாமாவுக்காக உம்பருலகச் சோலையினின்றும் பாரிசாத மரத்தைப் பிடுங்கி வந்த பெம்மான் (8). முடியில் பிறையணிந்த சிவனை வலப்புறத்திலும், நான்முகனை நாபிக் கமலத்திலும், பெரிய பிராட்டியைத் திருமார்பிலும் வைத்துக் கொண்டுள்ளவன் (9). “இத்தகைய எம்பெருமான்தான் காழிச் சீராம விண்ணகரில் கோயில் கொண்டுள்ளான். அவனை வணங்கும் பொருட்டு அத்திருத்தலத்திற்கு ஏகுவீர்” என்று நம்போன்றவர்களை ஆற்றுப்படுத்துகின்றார் ஆழ்வார். மானசீகமாக நாமும் ஆழ்வார் காலத்துக்குச் சென்று விடுகின்றோம். இங்ங்னம் பாசுரங்களை மானசீகமாக அநுபவித்த நிலையில் தாடாளன் சந்நிதிக்கு வருகின்றோம். எம்பெருமானின் திருநாமம் தாடாளன், திரிவிக்கிரம முர்த்தி, கிழக்கே திருமுகம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பஞ்சாயுதங்களுடன் சேவை சாதிக்கின்றார். இடக்கால் தூக்கிய திருவடியாகவும், வலக்கை அபயம் தரும் பாவனையிலும் இடக்கை திருவடியில் பொருந்தியிருக்குமாறும் காட்சி அளிக்கின்றார். தாயார் மட்டவிழும் குழலி நாச்சியார். எம்பெருமானையும் எம்பெருமாட்டியையும் சேவிக்கும் நிலையில் திருமொழியின் பத்துப் பாசுரங்களையும் மிடற்றொலி கொண்டு ஒதி உளங்கரைகின்றோம். பல சுருதிப் பாசுரம், - செங்கமலத் தயனனைய மறையோர் காழிச் சீராம விண்ணகரின் செங்கண் மாலை அங்கமலத் தடவயல்சூழ் ஆலி நாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள் மங்கை வேந்தன் கொற்றவேற் பரகாலன் கலியன் சொன்ன சங்கமுகத் தமிழ்மாலை பத்தும் வல்லார் தடங்கடல்சூழ் உலகுக்குத் தலைவர் தாமே" (அயன் - நான்முகன்; கமலம் . தாமரை, தடம் - குளம், ஆலிநாடன் - திருமங்கையாழவார்; அருள்மாரி - அருளைப் பொழியும் மேகம் அரட்டு அமுக்கி - தீங்கு செய்வோரைத் தலையெடுக்க ஒட்டாது அமுங்கச் செய்பவ்ா; அடையார் - பகைவர்; வேள் . விரும்பத்தக்கவர் கொற்றம் . வெற்றி, பரகாலன் . எதிரிகட்கு எமன் சங்கம்முகம் - கூட்டம் கூடிக் கொண்டாடும்). 12. பெரி. திரு. 3,410