பக்கம்:சோழர் சரித்திரம்.djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

சோழர் சரித்திரம்

________________

கரிகாலன் " தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச் செல்வருஞ் சேர்வது நாடு " என்று தெய்வப் புலவர் நாட்டிலக்கணம் கூறினமையும் நோக்குக. வேளாண்மை செழிப்புற வேண்டுமேல் காடு காம்புகளைத் திருத்தி விளை நிலங்களாக்குதலும், ஆறு குளம் ஏரிகளை அமைத்தலும், உழு தொழில் செய்வாரைப் போதிய வளவு குடியமைத்துப் பாதுகாத்தலும் செயற்பாலனவாம். கரிகாலனால் இவை செய்யப்பட்டனவென்பது, காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம் பெருக்கி கோயிலொடு குடிநிறீஇ என்னும் பட்டினப்பாலை யடிகளாற் பெறப்படுகின்றது. மற்று, இவன் தன்னாட்டில் வெள்ளப்பாழ் உண்டாகாமலும் நாட்டின் எம்மருங்கும் நீர்ப்பாய்ச்சல் உளதாகவும் காவிரியின் கரையை உயர்த்திக் கட்டினன் எனவும் தெரிகின்றது. காவிரிக்குக் கரைகட்டிய இச்செய்தி, "சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப் பொன்னிக் கரைகண்ட பூபதியும் " என விக்கிரமசோழன் உலாவிற் கூறப்பெற்றுளது. தத்தம் ஆட்களுடன் போந்து காவிரிக்குக் கரை கட்டவேண்டித் தன் கீழடங்கிய அரசர் பலர்க்குக் கரிகாலன் கட்டளையிட்டனன் என்றும், அப்பொழுது தெலுங்கு நாட்டையாண்ட மூன்று கண்களையுடைய அரசனொருவன் அவன் பணியை மதித்துக் கரைகட்ட வாராது செருக்குற்றிருக்க, கரிகாலன் அவனது உருவைப் படத்தில் எழுதிவாச்செய்து படத்திலுள்ள அவனது நெற்றிக் கண்ணையழிக்க உடனே அவன் தனது நெற்றிவிழியை இழந்து தருக்கடங்கினான் என்றும்,