பக்கம்:சோழர் வரலாறு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

சோழர் வரலாறு



அறிகிறோம். இப்பட்டம் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் வழக்கில் இருந்ததைக் கல்வெட்டுகள் கொண்டு அறியலாம்.

அரசன் வேற்று நாட்டின் மீது போருக்குப் போகையில் வெற்றிவாள், கொற்றக்குடை, வீரமுரசு இவற்றை நன் முழுத்தத்திற் புறப்படச் செய்தல் வழக்கம், இங்ஙனம் செய்தல் வாள்நாட்கோள், குடைநாட்கோள், முரசு நாட்கோள் எனப்படும். அரசன் வஞ்சி சூடிப் பகைமேற் செல்லும் பொழுது தன் படைவீரர்க்குப் படைக்கலம் முதலியனவும், பரிசிலர்க்குப் பொருளும் கொடுப்பன் போரினை மேற்கொண்ட பின்னாளில் படைகட்குப் பெருவிருந்து செய்து மகிழ்விப்பன்.[1]

பட்டங்கள்: சேனைத் தலைவர்க்கு ஏனாதி என்ற பட்டம் அளித்தல் போன்றே அமைச்சர், கணக்கர், வேளாளர் முதலாயினார்க்குக் காவிதி என்ற பட்டமும், வணிகர்க்கு எட்டி என்ற பட்டமும் அளித்து அதற்கு அடையாளமாகப் பொன்னாற் செய்யப்பட்ட பூவினை அளிப்பர். அவை எட்டிப்பூ, காவிதிப்பூ எனப்படும்.[2]

வீரக்கல்: போரில் இறந்துபட்ட வீரர்க்குக் கல்நட்டு, பெயரும் பீடும் எழுதி, பீலிசூட்டிச் சிறப்புச் செய்தல் மரபு. இப்பழக்கத்தால் வீரர்க்கு உற்சாகமும் காண்போர்க்கு நாட்டுப் பற்றும் உண்டாதல் இயல்பு. இவ்வீரக் கற்கள் இருந்த இடங்கள் நாளடைவில் கோவில்களாக மாறிவிட்டன. வீரக்கல் நடுதல்பற்றித் தொல்காப்பியம் விரித்துக் கூறல் காணத்தக்கது. கல்லைக் காண்டல், தேர்ந்தெடுத்தல், நீராட்டல், உருவந்தீட்டல், நடுதல் விழாச் செய்தல் முதலிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன. இதனை நன்கு விளக்கிய பெருமை சிலப்பதிகாரத்திற்கே உரியது. வஞ்சிக்காண்டத்தில்


  1. N.M.V. Nattar's ‘cholas’, p. 101.
  2. Ibid.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/118&oldid=482454" இலிருந்து மீள்விக்கப்பட்டது