பக்கம்:சோழர் வரலாறு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

சோழர் வரலாறு



என்பன சோழ அரசர் மூவரைப் பற்றியவை. அவை வரலாற்றுக்குத் துணை செய்வன ஆகும். சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி வரலாற்றுச் சிறப்புடையது. கலிங்கப் படையெடுப்பு, சோழர் பரம்பரை, குலோத்துங்கன் சிறப்பு, அவனது தானைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான் சிறப்பு இன்ன பிறவும் இனிதறிய இந்நூல் உதவி செய்கிறது. வைணவ நூல்களான திவ்ய சூரி சரிதம், குருபரம்பரை என்பன எழுதப்பட்ட காலமும் சோழர் காலமே ஆகும். இவை இராமாநுசர் காலத்தை உறுதிப் படுத்தவும் அக்காலத் தமிழ்நடை, வைணவ சமயநிலை முதலியவற்றை அறியவும் உதவுகின்றன. ஆழ்வார் பாசுரங்கட்கு விரிவுரை வரைந்த காலமும் ஏறக்குறைய இதுவே ஆகும். புத்தமித்திரர் என்பவர் செய்த வீரசோழியம் வீர ராசேந்திரன் காலத்ததே ஆகும். யாப்பருங்கலக் காரிகை, விருத்தி என்பனவும் இக்காலத்தேதான் செய்யப்பட்டன. சைவ சித்தாந்த சாத்திரங்களிற் பல இக்காலத்தேதான் செய்யப்பட்டன.

வெளிச் சான்றுகள்

சாசனங்கள்: சோழர் காலத்தில் சோழப் பெரு நாட்டைச் சூழ இருந்தாண்ட மேலைச் சாளுக்கியர், கீழைச் சாளுக்கியர், இராட்டிரகூடர், கங்கர் முதலிய பலதிறப்பட்டோர் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சோழர் வரலாற்றையும் காலங்களையும் அறிய ஒரளவு துணை புரிகின்றன. சோழர்க்கு அடங்கிச் சிற்றரசராக இருந்து ஆண்டவர் பட்டயங்களும் வேண்டற் பாலனவே ஆகும்.

வெளிநாட்டார் குறிப்புகள் : சீனர் சிலர் எழுதி வைத்துள்ள செலவு (யாத்திரை)க் குறிப்புகள், அராபியர் குறித்துள்ள செலவுக் குறிப்புகள், மார்க்கோபோலோ போன்றோர் எழுதியுள்ள குறிப்புகள், மகாவம்சம் முதலியன இக்காலத் தமிழக நிலைமையை நன்கு விளக்குவனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/18&oldid=480266" இலிருந்து மீள்விக்கப்பட்டது