பக்கம்:சோழர் வரலாறு.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
சோழர் வரலாறு
 


இன்றளவும் வெளிவந்துள்ள குறிப்புகளும் பிறவும் வரலாற்று முறைக்கும் தமிழ் முறைக்கும் மாறுபடா வகையில் நன்கு ஆய்ந்து வெளியிடலே இந்நூலின் நன்னோக்கம் ஆகும்.


2. சங்க காலம்

சங்க காலம்

வரலாற்றாசிரியர் பலர் கடைச் சங்கத்தின் இறுதிக் காலம் கி.பி. 3-ஆம் நூற்றாண்டாக இருத்தல் கூடும் என்று முடிவு கட்டியுள்ளனர். இராவ்சாஹிப் மு. இராக வையங்கார் போன்றோர் அச்சங்கத்தின் தொடக்கம் ஏறத்தாழக் கி.மு. நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தக்க சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர். இன்றுள்ள தொகை நூற்பாடல்களை நடுவு நிலை யினின்று ஆராயின், இன்றுள்ள பாக்களில் சில கி.மு.1000 வரை செல்கின்றன என்பதை அறியலாம். ‘வட மொழியில் ஆதிகாவியம் பாடிய வான்மீகர் புறநானூற் றில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்’ என்று பல சான்றுகள் கொண்டு ‘செந்தமிழ் ஆசிரியராகிய திரு. நாராயண ஐயங்கார் அவர்கள் செந்தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை வரைந்துள்ளனர்.[1] வான்மீகியார் காலம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டென்று ஆராய்ச்சியாளர் கூறுவர். தருமபுத்திரனை விளித்து நேரே பாடியதாக ஒரு பாடல் புறநானூற்றில் உண்டு. பாரதப் போரில் இருதிறத்தார் படைகட்கும் உணவளித்தவன் என்று சேரலாதன் ஒருவன், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’, என்று புறநானூற்றிற் புகழப்பட்டுள்ளான். இராமாயண கால நிகழ்ச்சிகளில் சில புற-அக நானுறுகளிற் குறிக்கப்பட் டுள்ளன. இவற்றை நன்கு நோக்குகையில் தமிழ்ப் புலவர் ஏறத்தாழக் கி.மு. 1000த்திலிருந்து இருந்து வந்தனர் என்பதை ஒருவாறு அறியலாம்.[2] பல்லவர் என்ற புதிய


  1. Vide ‘Sentamil’ Vol. for 1939-’40.
  2. Vide Purananuttru Chorpolivuka!, Lecture 3.