பக்கம்:சோழர் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

71



இருவரும் அங்ஙனம் போர் இடுதல் தக்க செயலன்று. இச்செயல், தும்மைப் போன்ற வேந்தர்க்கு மனக்களிப்பை உண்டாக்குமே அன்றி உமக்கு நன்மை பயவாது. ஆதலின், இதனைத் தவிர்த்தலே முறை”[1] என்று இருவர் மனத்திலும் நன்கு பதியுமாறு புகன்றார்.

இளந்தத்தன்: இந்நிலையில் நலங்கிள்ளியால் பரிசில் பெற்ற இளந்தத்தன் என்ற புலவன் உறையூர்க்குட் புகுந்து நெடுங்கிள்ளியைக் காணவந்தான். அவன் பகைவனிட மிருந்து வந்ததால், ஒற்று அறிய வந்தவன் என நெடுங்கிள்ளி தவறாக எண்ணினான்; அத்தவற்றால் அவனைக் கொல்லத் துணிந்தான். இக்கேட்டைக் கேள்வியுற்ற கோவூர் கிழார் விரைந்து சென்று, நெடுங்கிள்ளியைக் கண்டு,

“ஐயனே, பழுமரம் தேரும் பறவைபோல நெடிய வழியையும் கவனியாது வள்ளல்களை நோக்கி வரும் எளிய புலவருள் இவன் ஒருவன், தான் வல்லபடி பாடிப் பரிசில் பெற நின்பால் வந்தவன்; அரசியல் ஒற்று முறைகளை அறிந்தவன் அல்லன். தான் கற்ற கல்வியால் தலை நிமிர்ந்து நடக்கும் புலவன் இவன். இவன் வந்த நோக்கத்தை அறியாது, நீ இவனைக் கொல்ல முயலுதல் கொடுஞ் செயலாகும்.” என்றார். அரசனும் அச்செயல் தவிர்ந்தான்.

உறையூர் முற்றுகை நலங்கிள்ளிக்கே வெற்றி அளித்ததென்பது தெரிகிறது. என்னை? நலங்கிள்ளி உறையூரை ஆண்டுவந்தான், அதனைத் தலைநகராகக் கொண்டிருந்தான் என்று புறப்பாட்டு 68 கூறலாம் என்க. மேலும், நெடுங்கிள்ளி நலங்கிள்ளியுடன் போரிட ஆற்றாது, பலவாறு முயன்று, இறுதியில் ‘காரியாறு’ என்ற இடத்தில் (போரிட்டு) இறந்தான் என்பது

  1. புறம் 45.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/73&oldid=480663" இலிருந்து மீள்விக்கப்பட்டது