பக்கம்:சோழர் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சோழர் வரலாறு



1. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

முன்னுரை: இவன் பெயரைக்கான, இவன் பேரரசனாக இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இராயசூய வேள்வி செய்பவன் பேரரசனாக இருத்தல் வேண்டும். எனவே, இவன் பல நாடுகளை வென்று அடக்கியவனாதல் வேண்டும் என்பதுதானே போதரும், புறம் 16-ஆம் செய்யுள் இவனது போர்த் திறத்தைப் பாராட்டியுள்ளது. அதனைப் பாடியவர் பாண்டரங்கண்ணனார் என்பவர். இவனைப் பற்றிய பாடல்கள் கிடைக்காமை வருந்தற்குரியதே.

போர்ச் செயல்கள்: “இவன் எல்லை இல்லாத படையினையும் துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும் உடையவன்; புலால் நாறும் வாளினையும் பூசிப் புலர்ந்த சாந்தினையும் உடையவன்; பகைவரது நெல்விளை கழனியைக் கொள்ளையூட்டி காவற் பொய்கைகளிற் களிறுகளைப் படிவித்து நாடு முழுவதும் செந்நிறமாகச் செய்த பெருவீரன். இவன் எண்ணப்படியே இவனுடைய களிறுகள் போர் செய்ய வல்லன.”[1] இங்ஙனம் இவன் போர் செய்த இடங்கள் எவை என்பது விளங்கவில்லை.

சேரனுடன் போர்: இப்பேரரசன் சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவனுடன் போர் செய்தவன். அப்போரில் இவனுக்கு உதவி செய்தவன் திருக்கோவிலுரை ஆண்ட மலையமான் ஆவன். அவனைப் பாட்டி வடம வண்ணக்கன் பெருஞ் சாத்தனார் பாடியுள்ளார்; “மலையன் இல்லாவிடில் நாம் வெல்லுதல் அரிதென்று சோழனும் நின்னைப் புகழ்கின்றான்; மலையன் இல்லாவிடில் நாம் தோற்பதரிது’ என்றுசேரனும் நின்னைப் பாராட்டுகின்றான். வள்ளன்மையிற் சிறந்த பெரியோனே, நண்பரும் பகைவரும் பாராட்டத்தக்க நினது வீரம் புகழ்தற்குரியதே ஆகும்”[2]


  1. புறம், 16.
  2. புறம், 125.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/96&oldid=481363" இலிருந்து மீள்விக்கப்பட்டது