பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 245

விழுந்து விடுவது நிச்சயத்திலும் நிச்சயம்! அம்மா! ஏனம்மா கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் நிற்கிறீர்கள்? சங்கதியை எங்களுக்கு முன்னால் சொல்லுங்கள்” என்று அதட்டிக் கூறினாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்டு, பூஞ்சோலையம்மாளது உயிரில் பெரும் பாகமும் போய்விட்ட தென்றே கூறவேண்டும். சகிக்க வொண்ணாத பெருத்த அவமானத்தினாலும் பயத்தினா லும் அந்த அம்மாளினது கைகளும் கால்களும் வெடவெட வென்று ஆடுகின்றன. உடம்பு கட்டிலடங்காமல் செயலற்றுத் துவண்டு துவண்டு தாறுமாறாய்ப் போனது. மனம் இருளடையத் தொடங்குகிறது. அறிவு பிறழ்ந்து தடுமாறுகிறது. நிரபராதிகளான பொன்னுரங்க முதலியாரும், அவரது சம்சாரமும் தான் சொன்ன பொய்யின் பலனாய் மற்றவர்களால் அவமானத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாகிறார்களேயென்ற நினைவு கூர்மையான ஆயிரம் ஈட்டிகள் குத்துவதுபோல அவளது மனத்தைக் குத்திப் புண்படுத்துகின்றது. தான் முதலில் கூறிய பொய்யை அப்பொழுது மாற்றிப் பேசினால், கோகிலாம்பாள் வேறு எந்த இடத்திற்குப் போனாள் என்ற கேள்வியும், உண்மையைச் சொல்லாமல் பொன்னுரங்க முதலியாரின் மேல் குற்றம் சுமத்த வேண்டிய காரணம் என்னவென்ற கேள்வியும் பிறக்கும். ஆதலால், அவைகளுக்குத் தான் எவ்விதமான சமாதானம் சொல்வதென்று பூஞ்சோலையம்மாளுக்கு விளங்கவில்லை. ஆகவே, எவ்விதமான மறுமொழியையும் தரமாட்டாமல் கலக்கமும் குழப்பமும் மயக்கமும் அடைந்து, கண்களைத் திறவாமல் தலையைப் பிடித்துக்கொண்டு சுவரில் சாய்ந்து நழுவி அப்படியே கீழே உட்கார்ந்து கொண்டாள்.

அந்த அம்மாளது நிலைமை அங்கிருந்தோர்க்கு முற்றிலும் பரிதாபகரமாக இருந்தது. ஆதலால், அவர்களுள் ஒருவர். ‘பெண் காணாமற் போன விசனத்தில் அம்மாளுக்குக் கொஞ்சம் மயக்கம் உண்டாகி இருக்கு போலிருக்கிறது. கொஞ்ச நேரம் பொறுத்திருக்கலாம். அவர்கள் தெளிவடைந்து சங்கதிகளை யெல்லாம் உள்ளபடி சொல்லுவார்கள். அப்பொழுது இந்தப் பொன்னுரங்க முதலியாருடைய பேச்சு உண்மையானதா தப்பானதாவென்பது வெளிப்பட்டுப் போகிறது. எது எப்படி