உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜியார்டனோ புரூனோ.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜியார்டனோ புரூனோ

திராட்சைக் கொடிகள் படர்ந்த மலைக் குன்றின் சரிவிலே படுத்துக்கொண்டு, எதிரே காணப்படும் நீலக் கடலினை நோக்கிய வண்ணம், நீடு சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறான் ஒரு இளைஞன். உலகோர் காணவிரும்பும் எழிற்கூடமாயும், இத்தாலியின் இணையற்ற செல்வமாயும் விளங்கும் நேப்பிள்ஸ், அவன் கண்முன்னே, தன்அழகெல்லாங் காட்டிக்கிடக்கின்றது. வளைகுடா வடிவிலே அமைந்த வனப்பு மிகுந்த கடற்கரை-வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்க, செழித்து வளர்ந்திருக்கும். மரம் செடி கொடிகள் - அடுக்கடுக்காய் நீண்டும் வளைந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும் காணப்படும் மலைகள் - அந்த மலைமுகடுகளிலே தங்கியிருந்து, மேலெழுந்து, வெள்ளிய வானிலே வட்டமிடும் கருமுகில்கள் ! இவைகளைக் கண்டு அடிக்கடி மனம் பூரித்துப்போகும் அந்த இளைஞன், அன்று கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படுகிறான்.

கவலையற்றிருக்கும் இளமைப் பருவத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டிய நெருக்கடி-எந்த வழியில் எதிர்காலத்தை ஈடேற்றுவது என்பதே அவ்விளைஞனுக்கு ஏற்பட்டிருக்கும் கவலை. அவன் மனக்கண்முன் இரண்டு நிலைமைகள் போட்டியிட்டு நிற்கின்றன. எந்த நிலைமையை ஏற்பது என்பதே அவனது கவலை. போர் வாள் ஏந்துவதா? வேதநூல் தாங்குவதா?-வட்டுடை