பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. சில நேரங்களில் சில மனிதர்கள்




—— ஜெயகாந்தன்



கங்கா : ஒரு சோதனை !

உண்மைதான்!- கங்கா தனிமனிதப் பிரதிநிதிதான்!- அதனாலேதான், அவளுக்கென்று தனியொரு விதியாகத் தனிப்பட்டதொரு வாழ்க்கை, தனியாகவும் தனிப்படவும் அமைந்தது; அல்லது, அமைக்கப்பட்டது. அந்த வாழ்க்கை சாமானியமாகவோ, அல்லது, சாதாரணமாகவோ அமைந்ததா ? ஊஹூம் ; இல்லை ; இல்லவே இல்லை ! அது ஒரு சோதிப்பாகவே அமைந்தது.

கங்காவைப் பொறுத்த மட்டில், அவளை மட்டின்றிச் சோதிப்பதற்கென்று. கண்ணுக்குத் தெரியாத ஏதோவொரு தெய்வம் எங்கேயோ இருந்ததென்னவோ உண்மை தான் !- ஆனாலும, கண்ணுக்குத் தெரிந்த பிரபு என்னும் உயர் மட்டத்துப் பிள்ளையாண்டான் ஒருவன் அவளைச் சோதனை செய்வதற்கென்று இங்கே, இந்தப் பட்டணக் கரையில் அன்றைக்கு, அதாவது ஒரு மகாமகத்தின் கால இடை வெளிக்கு முன்னதாகவே இருந்திருக்கிறான் என்பதுதான் உண்மையிலும் உண்மை !