பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 7


மனிதன் தோன்றினான் ; உலகம் திோன்றியது ...

உலகில், மொழி தோன்றிய பின்னர் தோன்றிய நாகரிகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர, அந்த நாகரிகத்துடன் மொழியும் இணைந்தும் பிணைந்தும் நாளும் பொழுதும் வளரலாயிற்று ; மொழியின்–மொழி நடையின்-மொழி நடைப் பாணியின் வளர்ச்சியிலும், வாழ்விலும், முன்னேற்றத்திலும் மேன்மையிலும் ‘இலக்கியம்’ பிறந்தது.

இலக்கியம் ஒரு கலை !

ஆய கலைகள் அறுபத்து நான்கு என்போம் !—இலக்கியக் கலை-இலக்கியத்தின் கலை, வரலாறு கொண்டது ; வரலாறு கண்டது ; மரபு சார்ந்தது ; மரபைச் சேர்த்தது! -இந்த உண்மை நிலை, அனைத்து உலகத்துக்கும் பொருந்துகிற போது-பொருத்தமாகிற போது, உலகத்தின் பாற்பட்ட பாரதத்துக்கும், பாரதத்தின் அங்கமான தமிழ்நாட்டுக்கும் பொருத்தும் : பொருத்தமாவதும் இயற்கை : இயல்பு ; நியதியும் கூட !

தொல்காப்பியச் சிறப்புப் பெற்ற தமிழ்கூறு நல்லுலகத்தில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடியின் மூத்த மொழி தமிழ் மொழி !

இவ்வாறு, தொன்மையும் சீர்மையும் கொண்ட பண்டைத் தமிழின் இலக்கியத்திலே, வாழ்வும் வளமும் கண்ட படைப்பு இலக்கியத்தைப் பண்பு பேணி, மரபு காத்து, வாழ்த்தி வாழவைத்த இலக்கியச் செம்மல்களையும், மரபு சார்ந்த பண்பாட்டு நெறிமுறையில் பண்டைத் தமிழின் புதுமைப் படைப்பு இலக்கியத்தைப் பாதுகாத்துப் பேணி வரும் தார்மிகமான பொறுப்புக்கு உரிமையும் உறவும் கொண்ட இலக்கியச் செல்வர்களையும் பால்வாய்ப் பசுந்தமிழ்’ என்றென்றும் நன்றியறிவுடன் போற்றிப் புகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.