பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

டால்ஸ்டாய் கதைகள்


‘அட, உதவாக்கரையே! என்னை எப்படி பயப்படுத்தி விட்டாய்! நீ நாசமாய்ப் போக!’ என்று எண்ணினான் வாஸிலி. ஆயினும், தனது பயத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட பிறகும் கூட அவனால் அச்சத்தை உதறிவிட முடியவில்லை.

‘நான் மன அமைதி பெற்று, நன்றாகச் சிந்தித்து முடிவு செய்யவேண்டும்’ என்று அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். என்றாலும் அவனால் நிலைத்து நிற்கமுடியவில்லை. மேலும் வேகமாகச் செல்லும்படி குதிரையைத் தூண்டிக் கொண்டுதான் இருந்தான் அவன். காற்றை எதிர்த்துச் செல்வதற்குப் பதிலாக தான் இப்போது காற்றோடு சேர்ந்துபோவதை அவன் கவனிக்கவே இல்லை. அவனுடைய உடல்—முக்கியமாக, மேற்சட்டையால் மூடப்பெறாமல், சேணத்தைத் தொட்டபடி இருந்த கால்களின் உட்பகுதி—வேதனை தரும் அளவுக்குக் குளிர்ந்து போயிற்று. குதிரை மெதுவாக நடந்த போது அந்த வேதனை அதிகரித்தது. அவனது கால்களும் கைகளும் பதற்றம் எய்தின. வேகமாக மூச்சு வாங்கியது. பயங்கரமான அந்தப் பனிப்பாலையின் மத்தியிலே, தான் அழிந்து படுவதை அவன் கண்டான்; தப்பிச் செல்வதற்கு உரிய வழி எதையும் கண்டானில்லை.

திடீரென்று குதிரை எதனுள்ளோ இடறி விழுந்தது. பனி ஓட்டத்தினுள் அமிழ்ந்து, ஆழ்ந்து போகத் தொடங்கியது. பின்னர் அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்து விழுந்தது. வாஸிலி ஆன்ட்ரீவிச் கீழே குதித்தான். அப்படிச் செய்தபோது அவனது கால் தங்கியிருந்த வார்ப் பட்டையை ஓர் புறமாக இழுத்துவிட்டான்;