பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

7

வேறு போக்கிடம் இல்லை என்கிற நிலைமை நீடிக்கிற வரையில், தான் பெற முடிந்ததைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.

இப்பொழுது, வண்டியைப் பூட்டும்படி எஜமான் உத்திரவிட்டதும் அவன் வழக்கம்போல் உற்சாகத்தோடும் மன நிறைவோடும், உள்வளைந்த தனது பாதங்களை வீசிவீசிச் சுறுசுறுப்பாக நடந்து, தொழுவத்தை அடைந்தான். குஞ்சம் கட்டிய கனமான கடிவாளத்தை ஆணி ஒன்றிலிருந்து எடுத்து, கடி இரும்பின் வளையங்களைக் குலுக்கி ஒலி எழுப்பிக் கொண்டே, மூடிக்கிடந்த கொட்டிலை நோக்கிச் சென்றான். வண்டியில் பூட்டப்பட வேண்டிய குதிரை அங்கே தான் தனியாக நின்றது.

அவனைக் கண்டதும், லாயத்தில் தனியாக நின்ற குதிரை சிறு கனைப்பு கனைத்தது. அதனால் அவன் ‘என்ன, தனியாக நிற்பது உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அசட்டுக் கழுதை!’ என்று பேசினான்.

நல்ல சுபாவம் உள்ள குதிரை அது. நடுத்தர வளர்த்தி பெற்ற, கருஞ்சிவப்பு நிற, ஆண் குதிரை, அதன் பின்பக்கம் சற்று அதிகமாகச் சரிந்து காணப்பட்டது. தான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்ற ஆளிடம் பேசுவது போலவே நிகிட்டா அந்தக் குதிரையிடமும் வார்த்தையாடினான்.

‘கொஞ்சம் பொறு. கொஞ்சம் பொறு. இன்னும் நேரம் கிடக்கிறதே. முதலில் நான் உனக்கு தண்ணீர் காட்டுகிறேன்’ என்று அவன் சொன்னான். தனது