பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

சோலை சுந்தரபெருமாள்


கடாவடியில நிப்பாட்டி, "அப்பா! இது உள்ளான்ல வைச்சுப் பொணையல் போடுங்க. அப்ப தான் அது திமிரு அடங்கும்." சொல்லியபடி தலைக் கயித்தை அவிழ்த்துப் பிடித்துக் கொண்டான்.

தூக்கு வாளியை பங்கீடாய் ஒரு இடத்தில் வைத்து பக்குவப்படுத்திவிட்டு, கோக்காலியை எடுத்துக் கொண்டு வைக்கல் மேம்புடியாய் புரட்ட ஆரம்பித்தாள் பாக்கியம்.

"பாக்யம்! நீ கடாவடிய ஓட்டு, வைக்க மசிய அவன் எடுத்துப் போடட்டும். நான் நல்லா அலக்கிப் போடுறேன். நேத்து ரொம்ப நெல்லு வீணா வயல்ல போயி சேந்துட்டு. செட்டியாருக்கும் போவாம நாமலும் திங்காம விரையமா போவாமப் பாத்து அள்ளிப் போடுறேன். அங்கயே பிரியப்போட்டு தெரச்சி வண்டியில ஏத்தி விட்டுடலாம்."

சொல்லிக்கொண்டே கடாவடி பொணையலை இழுத்துப் பிடித்து உள்ளான் மாட்டை கடாவடிக்கு மையமா ஓட்டிவிட்டு தலை கயித்தை அவளிடம் கொடுத்து, "கொடியான அதட்டி ஓட்டு" என்று சொல்லிப்புட்டு வைக்கப்போர் ஓரமாய் வெத்தலைப் பாக்கு பொட்டலத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு உக்காந்தான். முத்தண்ணன் வெத்தலைப் பாக்கோடு புகையிலையும் போட்டு வாயில் அடக்கிக் கொண்டால் போதும், ரெண்டு கடாவடி முடியிர வரைக்கும். சளைக்காமல் நிப்பான்.

இன்னிக்குப் பாக்கியத்தை கடாவடியை ஓட்டச் சொன்னதுக்குக் கூட காரணம். இருந்தது. கொஞ்சம் அவளுக்கும் வேலை லெங்கிசாய் இருக்கட்டுமேன்னுதான். நேத்திக்கு அவனே கடாவடியை ஓட்டினான். பாக்கியம் நேத்தைக்கு பொழுதுக்கும் கோக்காலியைப் பிடித்து வைக்கலை அலக்கிப்போட ரொம்ப தான் சிரமப்பட வேண்டியிருந்தது.

கடாவடி ஓட்டுரது அப்புடி ஒன்னும் லெங்குக இல்ல தான் பொணையல்ல. உள்ள எட்டு காளை மாடும் எப்ப சாணிப் போடுதுன்னு பாத்துக்கிட்டு இருந்து சாணி வைக்கல்ல விழுந்திடாம வைக்கல்ல புடிச்சு வாங்கிப் போடணும். உள்ளான் காளைக்கு கால்ல வைக்க சுத்தி கீழ விழுந்திடாம பாத்து கால்ல சிக்குர வைக்கல பிரிச்சுப் போட்டு கொடியான அதட்டி ஓட்டணும். அப்பதான் கடாவடி சீரா போவும். இடுப்பு முட்டும் உள்ள வைக்கல்ல ஓச்ச ஒழிவு இல்லாம சுத்தி வர்ரதுக்குள்ள தாவு தீந்து தான் போயிடும்.

மூணாவது கடாவடியை எறக்கிவிடும்போது சூரியன் உச்சிக்கு வந்துட்டு. பொட்டத் தெடல் அனலாய் தகித்தது. 'ஆவட்ட சோவட்ட' விட்டுப் போய் தான் ஆலமரத்துக் களத்துக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே. உடையார் பண்ணை களம் பொழங்கியது. கிட்டத்தட்ட அது அவர்களுக்கு சொந்தம் போலத்தான். அவர்கள் களம் வச்சிட்டா வேத்தாளுங்க களம்