பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சோலை சுந்தரப்பெருமாள்


தெய்வம்! ஏன் அவளுக்கு இந்தக் குறையை வைத்தது? இதனால்தானே, இதனால் தானே... ஐயோ! நினைக்கவும் பதறுகிறதே!

ரத்தினத்தின் அப்பாதான் அந்த ஊர்ப் பள்ளிக்கூடத்துக்கு வாத்தியாராக வந்திராமலே போயிருக்கப்படாதா? எத்தனையோ ஊரில் பள்ளிக்கூடம் இல்லை. இந்த ஊரில் அது இல்லையென்று யார் அழுதார்கள்? இங்கேயும் அது இல்லாது போயிருந்தால், எவ்வளவு மேலாக இருக்கும்! அப்பா வாத்தியார். அதனாலேயே ரத்தினசாமி இங்கே வந்து வாழ நேர்ந்தது; குருமூர்த்தியோடு சிநேகமாக நேர்ந்தது; அவருடைய தம்பிபோல உறவாட நேர்ந்தது. அவன் வேதாந்தி ஆனால் ரத்தினசாமியின் விதண்டாவாதங்களையெல்லாம் கேட்டு, அவனுக்குப் பதில் சொல்லுவதிலே அவருக்கு ஓர் ஆனந்தம். விளையாட்டிலேகூடக் குருமூர்த்தி ஒழுங்கு பிறழ மாட்டார்; ஆயினும் சீட்டாடும்போது ரத்தினம்’ செய்யும் தில்லுமுல்லுகளையெல்லாம் கண்டு அவர் மகிழ்வார். ‘ரத்தினம் புத்திசாலி; ஆனால் அதிலே தினையளவு கோணல் புத்தி கலந்திருக்கிறது’ என்பது அவர் கருத்து. எந்தவிதமான முரட்டுக் காரியத்துக்கும் ரத்தினத்தைத்தான் அவர் கூப்பிடுவார். அவர் என்ன? அவர் மனைவி சிவகாமியேதான் கூப்பிடுவாள். கிணற்றில் விழுந்த செம்பைக் கயிற்றின் துணைகூட இல்லாமல் இறங்கி எடுக்க வேண்டுமா? தென்ன மரமேறி நாலு இளநீர் பறித்துப்போட வேண்டுமா? எப்பேர்ப்பட்ட சண்டிக்காளை பூட்டிய வண்டியையும் சல்லியன் மாதிரி லாவகமாய்ச் சாரத்தியம் செய்ய வேண்டுமா? எதற்கும் ரத்தினசாமி தயார். ஆமாம்; அப்படி வண்டி ஓட்டியதால் தானே வந்தது வினை!

வண்டி பூர்த்தியாகிவிட்டது. கல்யாணத்துக்குப் புறப்பட வேண்டிய நாளைக்கு முந்திய நாள் மாலை. சிவகாமி ஒரு குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு குடிநீர்க் கிணற்றுக்குப் புறப்பட்டாள். ஊர்ப் பொதுமக்களின் சௌகரியத்துக்காக, அதிலே இப்போது புதிதாகப் பம்புக்குழாய் போட்டிருந்தார்கள். ஆகவே, அவள் தாம்புக்கயிறு எடுத்துச் செல்லவில்லை. குடத்தை ஒரு கையால் அணைத்து, மறுகையால் அழகாகப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல அவள் நடந்தாள்.

“ரத்தினு, பார்த்தாயா அண்ணியை? பாலகிருஷ்ணனை இடுப்பில் வைத்துயசோதை போவதை! பாவம் பிள்ளைக் குழந்தை இல்லை என்று பெருங்குறை இந்த யசோதைக்கு!” என்று கேலி செய்தார் குருமூர்த்தி.

மனைவியை இப்படித் தமாஷ் செய்வதிலே அவருக்கு ஒரு குஷி. அவளுடைய ஏக்கத்தின் பரிமாணத்தை அவர் அறியவில்லை. உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கும் எரிமலையின் உஷ்ணத்தை, சாந்தமான சமவெளியில் இருப்பவன்