பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V வடமொழி நூல்கள்

1. சிவபாரத சரித்திரம்: (வடமொழியும் தமிழும்)

சிவபாரத சரித்திரமென்னும் வடமொழி நூல் சிவாஜியின் அரசவைக் கவிஞராகிய கவீந்திர பரமானந்தர்[1] என்பவரால் இயற்றப்பெற்றது. வடமொழிச் சுவடிகள் நான்கு (டி 4223-4226) தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத்தில் உள்ளன. இந்த வடமொழிப் பகுதி, மராத்தி மொழிபெயர்ப்புடன் 1927 இல் திவேகர் (S.M. Diveker) என்பவரால் பூனாவில் வெளியிடப்பெற்றது. இது போன்று வேறொரு சுவடியைக்கொண்டு 1930இல் பூனாவில் ஆனந்த ஆசிரம வெளியீடாகவும் வெளிவந்துள்ளது.

இந்நூல் 32 அத்தியாயங்கள் வரையுள்ளது. 32ஆவது அத்தியாயம் ஒன்பதாவது செய்யுளுடன் முடிகிறது.

தஞ்சைச்சரசுவதி மகால் நூல் நிலையத்தில் சிவபாரதத் தமிழ்ச் சுவடியும்[2] உள்ளது. தமிழ்ச் சுவடிகளின் பிரிவில் டி 630 எம் 214 என்ற எண் கொண்ட தனிப் பிரதி மட்டும் உள்ளது. இதுவும் மேற்கண்ட வடமொழிச் சுவடி போன்றே 32 அத்தியாயங்களுடன் உள்ளதாகும். இவ்வோலைச்சுவடி 5-2-1920 இல் காகிதத்தில் பெயர்த் தெழுதப்பட்டுள்ளது; அதன் காப்பீடு எண் 217 ஆகும்.

இத்தமிழ்ப் பகுதி 1972இல் தஞ்சைச் சரசுவதி மகால் நூல் நிலையத் துணை நூலகர் திரு. ம. சீராளன் அவர்களால் சரசுவதி மகால் நூல் நிலைய வெளியீடாக வெளியிடப் பெற்றுள்ளது.

தஞ்சையில் ஆட்சிபுரிந்த முதலாம் சரபோஜி (கி.பி. 1710-1728) காலத்தில் இந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டது என்று சிவபாரதம் (தமிழ் ஆக்கம் ) முன்னுரையினின் றறியப்பெறும். இதற்குத் தகுந்த ஆதாரம் கொடுக்கப் பெறவில்லை.[3]

“சிவாஜியைக் கண்டு சூரிய ராஜா அஞ்சி ஓடிப் போனதும், சிவாஜி சிருங்கார்பூரில் தங்கியிருந்தார்” என்கிற வரையிலும் வடமொழிப் பகுதியிலும் தமிழாக்க நூலிலும் கூறியுள்ளன.


  1. See Jadunath Sarkar, House of Shivaji, Chapter 23, Shivaji's Poet Laureate, Pages 287 to 297.
  2. சுவடியின் இருமருங்கிலுமுள்ள கட்டைகள் சித்திரவேலைப்பாடுடையவை
  3. “There is also a Tamil version of it (Sivabharata), probably from this reign (Sarabhoji I) called Siva charitram” (Subramanian, Page 40)