பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

105


20. முதல் - சிறை அனுபவம்

"இன்றையச் சுதந்திரத்திற்கு, முதன் முதல், நானாகவே சிறைக்கும் போகிறேன் என்று இந்த நாட்டில், ஏன் இங்தியாவிலேயே சிறைக்குப் போனது, நானும் எனது குடும்பமும்தானே...

"நிலம், காணி இவையெல்லாம் எவ்வளவு சேர்த்து வைத்திருந்தாலும், அவன் செத்துப் போனதும், அவனது என்று சொல்ல மாட்டார்கள். அவனுடைய மகனது என்றுதான் கூறுவார்கள். இது இயல்பு. தனது என்று கூறும்படியானது தொண்டு ஒன்றுதான். மற்றவர்களுக்காகப் பலனை எதிர்பாராமல் தொண்டு செய்வது தான்."

- தந்தை பெரியார்

எதையும் வித்தியாசமாய்ச் சிந்தித்துச் செயல்பட்டால் அது மக்கள் மனதைக் கவரவே செய்யும்.

மதுவிலக்கு பிரசாரத்தில், யாரும் நினைத்தறியாத ஒரு புதிய கோணத்தில் செயல்பட்டார் ஈ.வே.ரா.

மறியல் செய்து பிறரது உடைமைகளைச் சேதம் செய்யவில்லை அவர். மாறாக - மது ஒழிப்பிற்காக தனது சொத்தையே அழித்தார்.

ஈ.வே.ரா. தென்னை மரங்களை வெட்டிய நிகழ்ச்சி ஈரோட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது. மக்களிடையே புதிய உத்வேகம் பிறந்தது. கள்ளுக்கடை மறியல் போராட்டம் தீவிரம் அடைந்தது.

அரசாங்கம் விழித்துக் கொண்டது.

மறியல் போராட்டத்தைத் தடுக்க நகரில் 144 தடை உத்தரவு போட்டது.