பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தந்தை பெரியார்


'திலகர் நிதியில் சேர்ப்பதும்; அந்தப் பணத்தை நானே வைத்துக் கொள்வதும் ஒன்றுதான்' என்று மறுத்து விட்டார் ஈ.வே.ரா. கொள்கைப்படி கோர்ட்டிலிருந்து எனக்கு அந்தப் பணமும் வேண்டாம்; அதுதான் உண்மையான பகிஷ்கரிப்பு - என்று ஈ.வே.ரா. உறுதியாக இருந்துவிட்டார்.

ஈ.வே.ரா.வின் கொள்கைப்பற்று காங்கிரஸ்காரர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மதுவிலக்குப் பிரசாரத்தை ஈ.வே.ரா. மும்முரமாக நடத்தினார். கள்ளுக் கடைகளின் முன் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டார்.

குடிக்காதே என்று குடிக்கிறவன் காலில் விழுவதை விட, அவனுக்கு மதுவைக் கொடுக்கிற மரத்தையே அழித்து விட்டால் என்ன என்று ஒரு புதிய கோணத்தில் யோசித்தார்.

இளநீரும், தேங்காயுமாய் மரத்திலிருந்து காலத்திற்கும் வருகிற வருமானத்தைப் பற்றி அவர் பொருட்டாக எண்ணவில்லை சிறிதும் தயங்காமல், தனது பண்ணையிலிருந்த ஆயிரக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி விட்டார் ஈ.வே.ரா.

இப்படிச் செய்ய, ஒருவருக்கு எவ்வளவு பெரிய தியாக மனப்பான்மை இருந்திருக்க வேண்டும்! மதுவின் பிடியிலிருந்து பாமர மக்கள் விடுபட்டுத் திருந்தி வாழ வேண்டுமென்று ஈ.வே.ரா. விரும்பினார்.

அந்த ஏழை அப்பாவிகள் மீது ஈ.வே.ரா. கொண்டிருந்த அளவு கடந்த மனிதாபிமானத்தையே அவருடைய அந்தச் செய்கை பிரதிபலித்தது என்றால் அது மிகையாகாதன்று.