பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

85


உள்ளே பிராமணர்கள் சாப்பிட்ட பந்தி முடிந்ததும், எச்சில் இலைகளைக் கூடையில் எடுத்து வந்து வெளியே கொட்டினார்கள்.

இராமசாமி பசியின் கொடுமை தாளாமல் அந்த எச்சில் இலைகளில் மீதமிருந்த உணவுகளை எடுத்து உண்டு பசியாறினார்.

மரத்தடியிலும், தெருவோரங்களிலும், கங்கைப் படித் துறைகளிலும், குளிரில் உடம்பு நடு நடுங்க படுத்து உறங்கினார்.

விடிந்ததும் கங்கைக் கரையில் புண்ணிய காரியம் செய்ய வருபவர்கள் போடுகிற அரிசி, பழம், சோறு இவற்றை உண்டு சில நாள் தள்ளினார். பசியின் கொடுமையையும் வறுமையின் நிறத்தையும் காசி அவருக்குக் கற்றுக் கொடுத்தது. காசியில் துறவியாய் வாழ முடியாது என்று தெரிந்து கொண்டதை விட -

காசி இந்துக்களின் புண்ணியத் தலம். அங்கு உன்னத வாழ்வு கிட்டும் என எண்ணியது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

அங்கு அவர் கண்ட காட்சிகள் மனதை துன்புறுத்தின. பிறரிடமிருந்து பணத்தை அபகரிப்பதற்காகப் பொய் சொல்லுபவர்களையும், துறவியைப் போல் தோற்றமளித்த ஒழுக்கங் கெட்டவர்களையும் கண்டு மனம் வருந்தினார். காசி அவருக்குக் கசந்தது.

தன்னிடமிருந்த மோதிரத்தை விற்றார். எல்லூரில் தனது நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பது நினைவிற்கு வந்தது.தன்னிடமிருந்த மோதிரத்தை விற்று எல்லூருக்கு ரயில் ஏறினார்.

அங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.