பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


இந்தி எனும் செந்தீ இன்றளவும் கொழுந்துவிட்டெரிகின்றது. முந்தி அவரே மூட்டிய தீயைப் பிந்தி அவரே அணைக்க நினைத்து மனம்மாறியும் முடியவில்லை. இந்தியாவின் தலைமைப் பீடத்தை யார் அலங்கரித்தாலும் சாம்பல் பூத்த இந்தி நெருப்பை ஊதி எரியவிடுவது வாடிக்கையாகிவிட்டது. தண்ணீரால் அல்ல; கண்ணீராலும் செந்நீராலும் அணைத்துப் பார்த்தும் அது தணிய மறுக்கிறது!

முதன் மந்திரியான ஆச்சாரியார் வீட்டு முன்னர் மறியல் செய்வது அரசுக்கு இடையூறாக உள்ளது என உணர்ந்த பெரியார். அதைத் தவிர்க்குமாறு பெருந்தன்மையுடன் தமது தொண்டர்களைக் கேட்டுக் கொண்டும், அரசின் அடக்குமுறைக் கொடுமை குறையவில்லை; போராட்டம் தொடர்ந்தது!

திருச்சியில் வழக்கறிஞர் கலிபுல்லா தலைமையில் பெரியார் கலந்து கொண்ட வழியனுப்புக் கூட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் புதுமையான முன்னுதாரணம் படைத்தது. தமிழர்படை என்பதாக 100 பேர் கொண்ட அணி அமைக்கப்பட்டு, அவர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டு, வழியிலுள்ள ஊர்களிலெல்லாம் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து கொண்டு 42 நாள் நடந்தே 577 மைல் கடந்து சென்னை சென்றடைவது என்பதாக ஒரு திட்டம். இந்தத் தமிழர் படைக்குத் தஞ்சை பள்ளியக்ரகாரம் அய். குமாரசாமி தலைவர். திருச்சி “நகரதூதன்” ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி யுத்தமந்திரி, பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி அணித்தலைவர். திருப்பூர் முகைதீன், மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் ஆகியோர் முன்னணியில், தொண்டர்களுக்கு அறிவுரை கூறி, 1938-ஆகஸ்டு 11-ஆம் நாள் வழியனுப்பி வைத்த பெரியார், 1938- செப்டம்பர் 11-ஆம் நாள் - அதே தமிழர் படையை வரவேற்றுச், சென்னைக் கடற்கரையில் திரண்டிருந்த இலட்சக்கணக்கான மக்கள் பெருவெள்ளத்தில், வீரமுழக்கம் செய்தார். அங்கே ஒரு புதுக்கர்ச்சனை புரிந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான் அது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கை திடீரெனப் பெரியாரின் உள்ளத்திலிருந்து வெடித்ததல்ல. இந்திய அரசியல் அமைப்பில், தமிழர் நலன் தனியாகப் பாதுகாக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை . எந்நாளும் பார்ப்பனரும் வடநாட்டாரும் ஆதிக்கம் செலுத்தியே வருவர். இதற்கான பரிகாரம், தமிழ்நாட்டின் ஆட்சி தமிழர்கைக்கு வருவதுதான் என்பன போன்ற கருத்துகள் 1930-ஆம் ஆண்டு முதலே பெரியாரின் உள்ளத்தில் உருவாகி வந்தன.

பின்னாளில் புதுக்கோட்டை திவானாக விளங்கிய கலிபுல்லா, பெரியாரிடமும் இயக்கத்தினிடமும் மிகுந்த பற்றுள்ளவர். போராட்டத்தை அவர் நெடுநாள் ஆதரித்து வந்தார்.