பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


கூறிவிட்டார். எப்படி சிக்கனம்?) முதல் நாள் இரவில் கே.கே. நீலமேகம் தலைமையில் எம்.ஆர். ராதா நடித்த மகாத்மா தொண்டன் நாடகம். மறுநாள் இரவில் குஞ்சிதம் குருசாமி தலைமையில் மு.கருணாநிதி நடித்த தூக்குமேடை நாடகம். டி.கே. சீனிவாசன் நன்றி நவின்றார்.

ரேஷன் முறை தீவிரமாக அமுலில் இருந்ததால், மாநாட்டுக் கட்டணத்துடன் உணவுக்கும் சேர்த்து வசூலித்து விட்டனர். பெரியார் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு கூட்டம் பெருகி வழிந்ததால், நேரத்தில் உணவளிக்க முடியவில்லை. தோழர்கள் பெரியார் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டு, வயிற்று உணவை மறந்து, செவி உணவை அருந்தினர்! ஈரோடு நகரமன்றம் அண்ணா , திரு.வி.க. இருவர்க்கும் வரவேற்பளித்துச் சிறப்பித்தது.

மீண்டும் அடுத்த திங்களே இந்தி எதிர்ப்பு அறப்போர் தொடங்கிவிட்டது. நவம்பர் 2-ஆம் நாள். கும்பகோணத்தில் 144 தடையுத்தரவு பிறக்கப்பட்டதால், அதை மீற வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டது. தினமும் தோழர்கள் மறியல் செய்தனர். பெரியார் தாமே களத்தில் இறங்கிட முடிவு செய்தார்.

1948 டிசம்பர் 18-ஆம் நாள் குடந்தையில் பெரியார் மறியல் செய்து கைதானார். நள்ளிரவு 2.15 மணிக்கு கும்பகோணத்தில் கைதான பெரியாரை, வேனில் ஏற்றி, முதலில் திருச்சிக்குக் கொண்டு சென்று, மீண்டும் தஞ்சை வந்து, பின்னர் ஐய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இறக்கி, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அலைக்கழித்தனர். அத்துடன் பத்தாம் முறையாகப் பெரியார் கைதானபோது - “அடக்கு முறை எங்கே நடந்தாலும், எப்படி இருந்தாலும், அதை முகங்கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அப்போது தான் நமது மானம் காப்பாற்றப்படும். சமாதானத்துக்குப் பங்கமோ, ஒழுங்குத் தவறோ ஏற்படக் கூடாது”- என்று கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார் பெரியார்.

ஆனால், ஓமந்தூரார் ஆட்சி மறுநாளே வெறியாட்டத் தொடங்கியது. தடியடியால் குடந்தையில் இரத்த ஆறு ஓடிற்று. போலீஸ் அதிகாரியின் கோர தாண்டவத்தை எடுத்துக் காட்டிடப் போர்த்தளபதி அண்ணா , “ஆதித்தன் கனவு” என்று ‘திராவிட நாடு’ இதழில் தீட்டினார். பின்னர் டிசம்பர் 26-ஆம் நாள் முதல் அரசின் போக்கில் அமைதி காணப்பட்டது. தடியடியும் கைதும் நிறுத்தப்பட்டன. எனவே 28-ஆம் நாள் திராவிடர் கழகப் போராட்டக் குழு கூடி, அறப்போரை நிறுத்துவதென முடிவெடுத்தது.

59 நாள் அறப்போர் நடைபெற்றது. இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்!